23. அண்ணலின் முடங்கல் பெற்ற வரசரு மற்றை யோரும் துண்ணென வுவகை பூப்பத் தொடுகழ லோனை வாழ்த்திக் கண்ணிய கருத்தி னோடு கடிமணங் காண வேண்டி எண்ணமுஞ் செயலு மொன்றி யெழுச்சிமேற் கொண்டா ரம்மா. 24. பழந்தமிழ்ச் சேர சோழ பாண்டிய ரெனுமுக் கோவும் செழுந்தமிழ்க் காக்குஞ் செல்வச் சிற்றர சருமற் றோரும் எழுந்தனர் மணத்தைக் காண வெழுந்தபல் லியத்தி னோசை எழுந்தன படையி னார்ப்பாங் கெழுந்தன கொடிமீ தூர்ப்பே. 25. கரியினை யூரு வாருங் காலினிற் சேரு வாரும் பரியினை யூரு வாரும் பல்லக்கி லேறு வாரும் வரிமணித் தேரூர் வாரும் வண்டியூர் வாரு மாக நிரல்பட வரச வெள்ளம் நிலவரை நெளியச் சென்ற. 26. ஆடவ ரரியி னார்ப்பர் யானைக ளிடியி னார்க்கும் கோடுகள் வளியி னார்க்குங் குழலினஞ் சுரும்பி னார்க்கும் மூடுசங் கெழிலி யார்க்கும் முரசினங் கடலி னார்க்கும் ஊடிய வார்ப்பின் சும்மைக் குவமையென் சொல்வே னம்மா. 27. பாடியு மாடி யும்பூப் பறித்துமார்ப் பரித்தும் பேர்த்தும் ஆடிய லரச ரீட்ட மணியணி யாகச் செல்ல ஏடெழுத் தாணி மேய விருந்தமிழ்க் கொடியி னீட்டம் ஓடிமுன் காண்பே மென்றே யும்பரிற் பறந்து செல்லும். 28. அருநகர்க் குன்ற நீங்கி யருந்தமி ழரச வெள்ளம் வருவழி யாற்றிற் பாய்ந்து வயங்குநா னிலம்ப ரந்து பெருகிய காட்சி யென்னும் பெரும்பயன் படச்சு ருங்கித் திருவமர் மாயோன் செல்வத் திருநகர்க் கடல்புக் கன்றே. 29. மன்னவ ரொன்றோ மற்றும் வண்டமி ழகத்து வாழும் பன்னல மொருங்கு வாய்ந்த பழந்தமிழ் மக்க டம்மோ டின்னிய லிசைகூத் தென்ன வியலுமுப் புலவர் தாமும் தென்னவன் வாழ்க வென்று திருநகர் புகுந்தா ரம்மா. ------------------------------------------------------------------------------------------- 25. கால் - காற்று. நிரல் - வரிசை. 26. கோடு - கொம்பு. வளி - காற்று. எழிலி - முகில். ஊடிய - மாறுபட்ட சும்மை - தொகுதி. | |
|
|