30. ஆங்கவர் தமையேற் றன்போ டவரவர் தகுதிக் கேற்ற பாங்கினி லிருக்கை நல்கிப் பண்பொடு விருந்து மாற்றித் தேங்கிய புகழா னிற்பச் செந்தமிழ்ச் செல்வ ரந்த ஓங்கிய நகர முள்ள முடைபடும் படியு றைந்தார். 31. தமிழருந் தமி்ழ்வாழ் வாருந் தமிழ்மொழி வளர்ப்ப தோடு தமிழரின் றலைவராகித் தமிழகந் தனைக்காப் பாரும் தமிழநங் கையரும் வந்து தங்கலாற் றமிழன் சீரூர் தமிழராம் பொருள்சேர் காட்சிச் சாலைபோற் பொலிந்த தம்மா. 32. ஈங்கிவ ராக வாய்மைக் கிருப்பிட மாகச் செங்கோல் தாங்கியே தமிழ கத்தைத் தனிக்குடை நிழல்கீழ்த் தங்கத் தீங்கறி யாது மக்கள் செந்தமி ழின்பந் துய்க்கப் பாங்குடன் புரக்கு மண்ணல் பண்பினை யினிது காண்பாம். 33. மலையிடைத் தனியாக் கண்டு வண்டமிழ்க் காதல் கொண்டு நிலவிய காட்சி தந்து நெஞ்சினைக் கவர்ந்து சென்ற தலைவியின் றந்தை சிந்தை ததும்பிய முடங்கல் கண்டு விலையிலாப் பொருளைப் பெற்ற வெறியன்போ லுவகை பூத்தான். 34. பூத்தவன் காத லென்னும் பொருளினைத் தந்து தன்னைக் காத்தவள் தன்னை நேரிற் கண்டதே போல வந்த மூத்தவன் செங்கை தந்த முடங்கலை முத்த மிட்டே பாத்தனைப் பயிலு முள்ளம் பண்படப் பதித்துக் கொண்டான். 35. கொண்டவன் மதிவ லோரைக் கூவியே மகளின் வாழ்க்கை கண்டவன் முடங்கல் காட்டிக் கருத்தையு முரைக்க வன்னார் தண்டமி ழிறைவா வாழ்க தாழ்க்கிலேம் பயண மீதோ கொண்டன மெனவெல் லோர்க்குங் கூறின ரவரு மார்த்தார். 36. மின்னியல் மதியந் தன்னை வெண்முகில் மறைத்தல் போலப் பொன்னினு மணியி னாலும் பூவினும் பொன்பட் டாலும் இன்னிய லொளிமை வாய்ந்த வெழினல வுருவை மூடி மன்னுயிர்த் தந்தை தன்னை மணமக னாக்கி னார்கள். ------------------------------------------------------------------------------------------- 33. வெறியன் - வறியவன். | |
|
|