பக்கம் எண் :


இராவண காவியம் 221

   
        37.    மணமகற் கோலம் பூண்ட மாபெருந் தலைவன் றன்னைக்
               குணமொடு குறியும் வாய்த்த கோக்களி றதன்மே லேற்றி
               இணையிலா விறைவன் வாழ்க வெனத்தமிழ்ப் பெரியார் வாழ்த்த
               மணமுர சியம்பப் பாடி வறிதுற வழிக்கொண் டாரே.

        38.     மன்றலந் தொடைய லோடு மணியணிக் கலன்கள் பூண்டு
               வென்றிகொ ளரச யானை மிசைச்செலு மிறைவன் றோற்றம்
               குன்றின்மேற் களிற்றி யானை குழாத்தொடு கனியும் பூவும்
               ஒன்றிய கோடு தாங்கி யுயர்ந்துசெல் லுதல்போன் றம்மா.

        39.     மாமகன் வாழ்க காதல் மணமகன் வாழ்க மாயோன்
               கோமகள் வாழ்க காதற் குன்றமும் வாழ்க வென்றே
               போமவர் தாமோ வென்றே போமொலி கேட்டுக் கேட்டுக்
               கோமகர் வாழ்க வென்றக் குன்றமும் வாழ்த்து மம்மா.

        40.     காரணி யணியாய்ச் செல்லுங் காட்சிபோல் யானை செல்லும்
               தேரணி யணியாய்ச் செல்லுந் திரையெனக் குதிரை செல்லும்
               ஊரணி யணியாய்ச் செல்வ தொப்பவே யூர்தி செல்லுந்
               தாரணி யணியாய்ச் செல்லுந் தகையினின் மகளிர் செல்வர்.

        41.     முடியெலா மின்னிற் செல்லும் முகமெலா மதியிற் செல்லும்
               அடியெலாம் விரைவிற் செல்லு மகமெலாங் களிப்பிற் செல்லும்
               வடிவெலா மறைத்துச் செல்லும் மணகன் வருகை தன்னைக்
               கொடியெலாம் பறந்து முன்போய்க் கூறுவே மென்னச் செல்லும்.

        42.     சந்தன மணத்திற் செல்லுந் தாமரை முகத்திற் செல்லும்
               கொந்தலர் குழலிற் செல்லுங் குவளைகள் விழியிற் செல்லும்
               மைந்தர்கள் வனப்பிற் செல்வர் மங்கையர் முனைப்பிற் செல்வர்
               இந்தவா றின்னு மிவ்வா றிராவண னுறவு செல்லும்.

        43.     பூணுவா ரணியுஞ் சாந்தும் புதுக்குவா ருடையு மேலும்
               காணுவார் பளிங்குஞ் சீப்புங் கருதுவார் முன்னும் பின்னும்
               நாணுவா ரயலுந் தம்மு நயக்குவா ருடையும் பூணும்
               வேணவா வியல்பை முற்றும் விளக்குவார் மகளி ரன்றே.
-------------------------------------------------------------------------------------------
        38. கோடு - மரக்கிளை. 42. முனைப்பு - ஊக்கம். 43. அயலாரையுந் தம்மையும் ஒத்துப் பார்த்துத் தாமவருக் கீடில்லையென நாணுவர். நயத்தல் - விரும்புதல்.