பக்கம் எண் :


இராவண காவியம் 23

   
     முதலியவற்றிற்கோர் சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்றது இது. எனவே, சிறந்ததோர்
காவியமாக அமைந்துள்ள இராவண காவியம் தமிழின் இனிமை கண்டு சொக்குவோருக்கு,
விருந்தாக அமையுந்தகைமைத்து.

     இராமாயணம், ஆரிய ஆதிக்கத்துக்குப் பயன்பட்டதென்பது மறுக்கொணாத
உண்மை. பண்டித நேரு அவர்கள் தம் திருமகளாருக்குத் தீட்டிய திருமுகத்திலேயும்
இதனைக் குறித்துள்ளார். நோக்கமே அந்நூலுக்கு அதுதான்.

     தோழர் புலவர் குழந்தை, தமிழர் - தமிழ் இனம் விழிப்புற்று வீறு கொண்டு,
விடுதலை பெற்று, வீரமக்களாய், தன்னாட்சித் தனியரசுரிமையுடன் வாழ வேண்டு்ம் என்ற
நோக்குடையார். எனவே, அவர் தமது அறிவுத்திறனை, ஆராய்ச்சி அனுபவத்தை,
தமிழை, தமிழ்க் கவிப்புலமையை இந்த நோக்கத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்.
காவியத்திலே - தமிழ்நாடு, தமிழ், தமிழர்தன்மை, ஆரியர் வருகை, அவரைத் தமிழர்
ஆதரித்தமை, ஆரியரின் உட்கருத்து, அவர் தம் உளவு முறை, கெடுநினைப்பு தீயசெயல்
ஆகியவற்றினை விரித்துரைத்திருக்கிறார்.

     சுருங்கக் கூறுமிடத்து இந்நூல், பழமைக்குப் பயணச்சீட்டு; புதுமைக்கு நுழைவுச்
சீட்டு; தன்மான இயக்கத்தார் தமிழ்ப் பகைவர்கள், காவியச்சுவை யறியாதார்,
கலையுணர்வில்லாதார் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம்; தமிழ்
மறுமலர்ச்சியின் தலைசிறந்த நறுமலர்; நெடுநாள் ஆராய்ச்சியும், நுண்ணிய புலமையும்,
இனப்பற்றும் ஒருங்கமைந்த ஓவியம்; தமிழரின் புதுவாழ்வுக்கான போர் முரசு; காவிய
உருவில் ஆரியத்தைப் புகுத்திவிட்டோம். எனவே, இது அழிந்துபடாது என்று
இறுமாந்திருப்போருக்கு ஓர் அறை கூவல்; தமிழருக்கு உண்மையை உணருமாறு கூறும்
ஓர் அன்பழைப்பு; தமிழரசுக்குக் கால்கோள்; விடுதலைக் கீதம்.

     இவ்வரிய நூலை, மிகச் சிரமப்பட்டு, தமிழரின் தன்மானம் தழைக்க வேண்டும்
என்ற பெருநோக்குடன் எழுதியுள்ளமைக்குப் புலவர் குழந்தைக்கு என் நன்றியறிதலைத்
தெரிவித்துக் கொள்வதுடன், நந்தமிழ் மக்கள் இதற்குப் பேராதரவு தருவர் என்று
அவர்க்கு உறுதி கூறுகிறேன். தமிழராகிய நீவிர், உமக்கென ஆக்கப்பட்ட இத்தனித்
தமிழ்க் காவியத்தைப் போற்றியாதரிப்பீர் என்ற நம்பிக்கையை ஈடேற்றி வைக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன். வணக்கம்.
 
காஞ்சிபுரம்  
15-9-46                      
                          அன்பன்,
                        அண்ணாத்துரை