7. முல்லையுங் குறிஞ்சியு முறைமை தப்பியே புல்லியே யிருமையைப் போக்கி யொன்றென எல்லியின் பகையதா யிருளின் சேக்கையாய் அல்லவர் மனமென வமைந்தி ருந்தது. 8. சந்தன மரங்களுந் தழைத்த வேங்கையும் கொந்தலர் செடிகளுங் கொடியு மாம்பலும் பொந்துறு புதர்களும் புல்லும் புல்லியே விந்தமு மணமலி விந்தம் போலுமே. 9. இலையெனுங் குழலிடை யிணரைத் தாங்கியே அலையரு விகளெனு மாடை பொத்தியே மலையகற் சுனைமலர் மலர்ந்து நோக்குற மலைமகள் நிற்பபோல் வயங்கு மாயிடை. 10. பாவரு மருவிநீர் பாய்ந்து செல்லுதல் தாவரு மலைமகள் தனது செல்வமாம் மாவையும் புள்ளையும் வடவர் கோட்புறாக் காவலி லென்றழுங் கலுழ்ச்சி போலுமே. 11. பல்லிலை வல்லிகள் படர்ந்த வாயிடைச் செல்லியர் காறடத் திருகி வீழுதல் கொல்லிய கட்டிய குறவர் கண்ணியில் பல்லுழை மானினம் படுதல் போலுமே. 12. புதரென மரமெலாம் பொதுளி மொய்த்தலான் மிதவிய பசும்படாம் விரித்தல் போறலாற் கதிர்புக விடம்பெறாக் கலுழ்ந்து செங்கதிர் அதரினை நீங்கியே யகன்று செல்லுமே. 13. கானிடை நறுமணங் கமழுந் தூயவெண் பூநிறங் கண்டிதென் புதிய நம்மவர் ஆனவின் னிறத்துட னவிர்கின் றாரென வானிடை மீனினம் மதியை நோக்குமால். ------------------------------------------------------------------------------------------- 7. எல்லி - சூரியன், பகல். அல்லவர் - வஞ்சர். 8. ஆம்பல் - மூங்கில். விந்தம் - காடு. 9. இணர் - பூங்கொத்து. வயங்கும் - விளங்கும். 10. பாவரும் - பரந்துவரும். கோட்புறா - கொள்ளா. கலுழ்ச்சி - கண்ணீர். 11. கால் - தட. கண்ணி - வலை. உழை - ஒருவகை மான். 12. புதர் - புல். பொதுளி - தழைத்து. மிதவிய - மிதந்துள்ள. கலுழ்ந்து - அழுது. 13. மதி மீன்களின் தலைவனாகையால் பார்த்தன. | |
|
|