8. மற்றிவை யுரைக்க மன்னன் வசிட்டன்மன் னவனைப் பார்த்துக் கொற்றவா அகத்துட் கொண்ட குறைதனை யொழித்தின் பாக்கும் நற்றிற மதனை வேதம் நவின்றுள ததனை யானும் சொற்றிடக் கேட்பா யென்று சுவையுறச் சொல்ல லானான். 9. யாதெனிற் பிள்ளை யில்லா ராங்கதை யடைய முன்னாள் வேதம துரைத்த மேலோர் விளக்கமாய்ப் பின்னோர்க் காக ஓதியே வைத்துப் போனார் உரியதோர் குதிரை வேள்வி கோதிலாய் அதனைச் செய்து குலத்தினை விளக்கு வாயே. 10. மாமுனி யிதனைக் கூற மற்றவ ராமா மென்னத் தாமரைத் தாளைப் போற்றித் தசரதன் எந்தாய் ஆக்கம் ஆமதைச் செய்யத் தக்கார் யாரென மைந்தா கேளும் கோமுனி யொருவ ருள்ளார் பெயர்கலைக் கோட ராகும். 11. என்னவே வசிட்டன் கூற எங்குளார் எனவே மன்னன் மன்னவ அங்க நாட்டில் வாழ்கிறா ரெனவ மைச்சன் அன்னரை யானே சென்றிங் கழைத்துமே வருவே னென்று முன்னவன் கூறிச் சென்று முனிவனை யழைத்து வந்தான். 12. மகப்பெறு குதிரை வேள்வி முற்றுற வசிட்டன் சொல்லும் வகைப்படி யமைச்சன் செய்ய மன்னருக் கோலை போக்கித் தொகைப்படு மறவர் சூழச் சுற்றுற நாட்டை யெல்லாம் அகப்படப் பரியு மாங்கோ ராண்டினிற் சுற்றி மீண்ட. 13. அடைகரை யுடையப் பாயும் அரும்புனற் சரயு வாற்றின் வடகரை யதனில் வல்லோர் வகுத்தனர் வேள்விச் சாலை தடவரை யானைத் தானைத் தலைவரா மரச வெள்ளம் இடவரை யறையில் லாமல் இடந்தொறு நிறைந்த தம்மா. 14. சுற்றமு நட்பும் வேள்வித் துறைபயில் குருக்கள் மாரும் மற்றுள பிறரும் வந்து வானக மீன்போல் தொக்கார் பொற்றொடி மாதர் சூழப் புரவல ரெழுந்து காணக் கொற்றவன் பூவா மூன்று கொம்புட னாங்குப் போந்தான். 15. மூவெழி யாகத் தூணில் முறையொடு குதிரை யாமை ஆவொடு பாம்பு மாடும் அளவிலாப் புள்ளுந் துள்ளித் தாவணி யதனிற் பட்டுத் தத்தளித் திருந்த கண்டார் யாவரும் வியக்க வேள்வி யாண்பரி விளங்கிற் றம்மா. ------------------------------------------------------------------------------------------- 15. தாவணி - மாடு முதலியன கட்டுங் கயிறு. | |
|
|