பக்கம் எண் :


302புலவர் குழந்தை

   
        2.     கண்டவர் தெருக்களைக் கடந்து காவலர்க்
              கொண்டவர் சனகனுக் குரைத்துக் கொண்டுபோய்
              மண்டபங் கடந்துயர் மன்னன் வந்தெதிர்
              கொண்டிடக் குருமணிக் கோயில் புக்கனர்.

        3.     சனகனு முனியொடச் சிறுவர் தங்களை
              இனிதுற நல்வர வேற்றுக் கொண்டுபோய்
              வினவின னவர்வர லாற்றை வெம்முனி
              இனவென வினிதெடுத் தியம்பி னானரோ.

        4.     சாடியென் வேள்வியைத் தடுத்த பாவியாம்
              தாடகை யெனுந்தமிழ்த் தைய லாள்படக்
              கோடிய வரிசிலைக் குமரர் காத்தனர்
              மாடநீ டயோத்திமா மன்னன் மைந்தர்கள்.

        5.     வில்லினி லிணையிலா வீரர் மக்களுக்
              கல்லொடு பகலுவந் தருளு மாண்மையர்
              நல்லவர் இவர்பெயர் ராம லக்குவர்
              சொல்லுவர் பரதசத் துருக்கர் மற்றவர்.

        6.     செல்வர்கள் நால்வருஞ் சிறந்த செல்வமாம்
              கல்விகற் றுயரிய கலைகள் முற்றுறப்
              பல்வகைக் கேள்வியும் பருகி வாழ்கிறார்
              வில்வலி தனிலிணை வீர ரன்னரே.

        7.     இனபல வாயெடுத் தியம்பிக் கோசிக
              முனியவர் தமையறி முகப்ப டுத்தவே
              சனகனு முவந்தவர் தம்மை வாழ்த்தியே
              இனிதுரை யாடிநல் லின்பங் கொண்டனன்.

        8.     பெருந்தகை சனகனின் பெட்பைப் பெற்றவன்
              விருந்தி னராயுயர் மிதிலை தன்னிலே
              பொருந்தவே யவர்சில பொழுதைப் போக்கிநன்
              கிருந்தனர் சனகன தியல்பு காணுவாம்.

        9.     சனகனு முனிவனுந் தனிமை யாயரண்
              மனையினி லொருபுறம் மலர்ந்த காவிடைப்
              புனைமல ரிருக்கையி லிருந்து பொற்புற
              இனியன பேசியாங் கிருக்க மன்னனும்.