10. செய்தவ மறைமுனிச் செல்வ கேட்டிடுஞ் செய்தியொன் றுண்டெனச் செப்பு கென்றலும் உய்தியி லொருவருக் குயர்ந்த செம்பொருள் எய்திய மக்களென் றியம்பு மாமறை. 11. நற்றவ முன்னொரு நாளிச் சோலையைச் சுற்றியான் வருகையில் தோகை யாவளோ பெற்றுவைத் தகன்றபெண் பிள்ளை யொன்றைக்கண் ணுற்றிரு கையினு முவந்தெ டுத்தனன். 12. போதலர் காவிலோர் செடியின் பொன்னிழல் ஊதியம் பெறநில முழுத வேர்ப்படைப் பாதையி லொருகொடி பயந்து வைத்ததால் சீதையென் றழைத்தனன் பொருளுஞ் சேரவே. 13. இளமதி போன்றவவ் விளங்கு ழந்தையை உளமகிழ் வொடுவளர்த் தோம்பி வந்தனன் குளமலர் தாமரை குவியப் போந்திடும் வளர்மதி போலவள் வளர்ந்து வந்தனள். 14. பூவையுங் கிள்ளையும் புலம்பப் பாடியும் காவினுங் குளத்தினுங் களிப்ப வாடியும் ஓவியஞ் சுவைகெட வுருவங் கூடியும் பாவையுந் திருமணப் பருவ முற்றனள். 15. மின்மிகை யெனத்திரு மேனி வாய்ந்தலர் பன்மல ரெனமணப் பருவ மங்கையும் மன்மக ளாகியும் மணப்ப ரில்லரால் என்மனக் கவலைக்கோ ரிருக்கை யாயினாள். 16. தெண்டிரை யுலகினிற் றிருவு மாண்மையுங் கொண்டவென் குடிக்குயர் கோதை யாகியும் கண்டெடுத் தவளெனக் கண்ட மன்னர்கள் வண்டணி குழலியை மணக்க வந்திலர். ------------------------------------------------------------------------------------------- 12. ஏர்ப்படைப் பாதை - உழுபடைச் சால். சீதை - உழுபடைச்சால். | |
|
|