இந்த நூலுக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அரும்பெரும் ஆராய்ச்சி முன்னுரை வழங்கியுள்ளார்கள். அதில் அவர்கள் ‘இந்நூல் பழமைக்குப் பயணச்சீட்டு; புதுமைக்கு நுழைவுச் சீட்டு; தன்மான இயக்கத்தார் தமிழ்ப் பகைவர்கள்; காவிய மறியாதவர்கள், கலையுணர்வில்லாதவர்கள் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம்; தமிழ் மறுமலர்ச்சியின் தலைசிறந்த நறுமலர்; நெடுநாள் ஆராய்ச்சியும், நுண்ணிய புலமையும், இனப்பற்றும் ஒருங்கமைந்த ஓவியம்; தமிழரின் புதுவாழ்வுக்கான போர்முரசு; காவிய உருவில் ஆரியத்தைப் புகுத்தி விட்டோம்; எனவே, இது அழிந்து படாது என்று இறுமாந்திருப்போருக்குஓர் அறைகூவல்; தமிழருக்கு உண்மையை உணருமாறு கூறும் ஓர் அன்பழைப்பு; தமிழரசுக்குக் கால்கோள்; விடுதலைக் கீதம்’ என்று பாராட்டுகிறார்கள். முன்னைச் ழுசென்னை ராஜ்யழு ஆட்சிப் பொறுப்பில் வீற்றிருந்தோர், தமிழரசுக்குக் கால்கோள் செய்யும் இந்த விடுதலைக் கீதத்திற்குத் தடைவிதித்து நூல்களைப் பறிமுதல் செய்தனர். இப்போது ஏறத்தாழ 23 ஆண்டுகட்குப் பிறகு, நாலரைக் கோடி தமிழர்களின் இதய தெய்வமாக விளங்கும் பேரறிஞர் அண்ணா அமைத்துத் தந்த இன்றைய ழுதமிழ்நாடுழுஅரசு, ‘சென்னை ராஜ்ய’ அரசு விதித்த தடையுத்தரவை நீக்கியுள்ளது. ஆம்! தடை நீங்கி, ‘முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் ஒரு முழுமதி’போல, இப்போது ‘இராவண காவியம்’ - இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. நூலாசிரியர்க்குத் தமிழினம் கடப்பாடுடையது. தமிழ்மக்கள், இந்த விடுதலைக் கீதத்தை ஏற்றுப் போற்றி இன்பமும் பயனும் எய்தி மகிழ வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டு ழுவாழ்க செந்தமிழ்ப் பெரும்புலவர் குழந்தைழு எனச் சிந்தை மகிழ்ந்து வாழ்த்துகிறேன். வணக்கம். சென்னை 14-9-71 | |
|
|