50. அன்னவ னரசாண் டிருந்திடுங் காறும் அருந்தமி ழகத்தினில் நம்மோர் மன்னிய வமைதி யோடினி திருந்து வாழ்குவோ மென்றுளத் தெண்ணல் கன்னவில் தோளா பாம்பளைத் தேரை காண்டிடு மமைதியே காணும் என்னினிச் செய்கம் உன்னையே நம்பி இருக்குதும் ஆரிய வினமே. 51. செந்தமி ழகத்தில் நம்மவர் வேள்வி செய்துமே யுண்டினி திருக்க உந்தைமு னெதிர்த்த தமிழரை யொறுத்தே யுறுதுணை புரிந்தன னதுபோல் மைந்தநீ யுந்தை மரபினை விளக்கி வண்டமிழ்த் தலைவரை யொழித்தே நந்தமர்க் கீங்குத் தலைமைவாழ் வதனை நாட்டுத லுன்றலைக் கடனே. 52. அடிக்கடி வந்துற் காவன செய்வேன் ஆயிடை வாழ்நருஞ் செய்வர் முடிக்குறு வழியுங் கூறுவர் தமிழர் முறைகெடச் சூழ்ச்சியும் புரிவர் இடிக்குர லிளைஞர் கரவிடை வாழ்வர் ஈங்கிருந் தணிமையி லுள்ள குடிக்குயர் பஞ்ச வடியெனு மிடத்தைக் குறுகியே யினிதுவாழ்ந் திருப்பீர். 53. என்றகத் தியனு மின்னன பலவு மெடுத்துரைத் தேயிரா மனுக்கு வென்றிவில் லொன்றும் அம்பறை யிரண்டும் விழைந்துள மகிழ்வொடு கொடுத்துச் சென்றுமே வருக வெனவிடை கொடுப்பத் தெளிபுனற் கோதைபோ கிடத்தே ஒன்றிய பஞ்ச வடியெனு லிருந்தூங் குவந்துவஞ் சனைபுரிந் திருந்தான். மூன்றாவது விந்தக் காண்டம் முற்றிற்று. | |
|
|