46. ஐயிரண் டாண்டு மருந்தமிழ் கற்று மாயிடைப் பாங்கரின் வாழ்ந்த பொய்யறி யாத தமிழரி னட்பைப் பொருந்தியும் விற்றொழில் கொடுத்தும் மெய்யறி யாத வாரிய முனிவர் வேள்விசெய் திடத்துணை புரிந்தும் தெய்யறி யாத வுயிரொடு கள்ளும் தெவிட்டவுண் டிருந்தன னப்பால். 47. ஆயிடை யகன்று சுதீக்கணன் காட்ட அகத்தியன் குடிலினை நாடித் தூயவக் கானத் திடைவள ருயிர்கள் துடித்திடக் கொன்றுதின் றருகில் மேயபல் வளமுங் கண்டிடை யுள்ள முனிவர்கள் விழைவுட னனுப்பப் போயகத் தியனைக் கண்டுமே வணங்கிப் புக்கிருந் தனனகத் தியனும். 48. வருகையை யெதிர்பார்த் திருந்தனன் மைந்த வளமலி தமிழக முழுதும் ஒருமொழி வைத்தாண் டிடுமிரா வணனும் உணர்ந்திலன் முதுமறை வேள்விப் பெருமையை யதனால் வேள்விசெய் நமர்க்குப் பிணியெனப் பேரிடர் விளைத்து வருகுநன் வீர நின்வர வதற்கோர் மருந்தென் மதிக்குநன் மாதோ. 49. அமிழ்துவாய்க் கொன்றே செவிக்கிலை யின்பம் ஆதலால் அமிழ்தினு மினிய தமிழ்முழு துணர்ந்தோன் தாயகம் தமினம் தாய்மொழிப் பற்றினில் மிக்கோன் தமிழறிந் தவரை யுயிரினு மேலாத் தான்மதித் திடுந்தக வாளன் அமையுமிப் பண்பே நம்மரீங் கிருக்க அமைந்ததா மன்றிவே றில்லை. ------------------------------------------------------------------------------------------- 46. தெய் - காலை. உயிர் - உடலைக் குறித்தது. | |
|
|