81. என்றின் னனவஞ் சினங்கூறி யேக்கற்றுக் கன்றிக் கதறியிரு கண்ணீரும் புண்ணீரா நின்ற நிலையா நெடுமூச் செறிந்தவனும் ஒன்றுந் துணியாம லுள்ளற்றுத் தன்மறந்தான். 82. அண்ணா வினியென் றரும்பாவி யென்றனிரு கண்ணார வுன்றன்னைக் கண்டண்ணா வென்றழைப்பேன் பெண்ணோடு கூடப் பிறந்துந் தனியானீர் மண்ணானே னந்தோ வருந்தே லெனப்பொன்னும், 83. ஓவென்ற கூக்குரலே யுள்ளும் புறம்பாக ஏவென்ற கண்மூச் செறிந்தூ துலைக்குருகின் கோவென்று வாய்விட்டுக் கூவிச் சினைதொட்டுத் தாவென்று கைகாட்டிச் சட்டென் றுயிர்விட்டாள். 84. அம்மி நிலமாக வாய்குழவி தாமாகச் சும்மென் குழலுந் துகிலணியுஞ் சாந்தாகப் பொம்மென்று நல்லார் புரண்டழுது புல்லென்றார் கம்மின்றி யாடவர்கள் கல்லாய்ச் சமைந்தாரே. 85. இன்னது செய்வ தெனவறியா தேமுற்றே தன்னந் தனியாத் தழுவித் தழுவியழு துன்னி யொருவா றுணர்வெய்தி நோநொந்து பொன்னைப் புனைந்தெடுத்துப் போயடக்கஞ் செய்தனரே. 86. காரிகையைக் கொன்ற கயமைக் கருதாராம் ஆரியரை யின்றோ டடியோ டொழித்துவர வீரர் திரள்கவென வெற்றி முரசறைவித் தோரிடங்கொள் ளாதுள் ளுடன்றான் படைவலனும். ------------------------------------------------------------------------------------------- 83. ஏ - அம்பு. உலைக்குருகு - கொல்லன் உலைத்துருத்தி. துருத்தி போல் பெருத்து உயிர்விட்டாள். தா - தாழ்வு. 84. சும்மை - ஒலி. பொம்மென்று - கூட்டமாக. கம் - தொழில். 85. ஏமுறுதல் - மயங்குதல். 86. உடலுதல் - சினத்தல், வருந்துதல். | |
|
|