பக்கம் எண் :


இராவண காவியம் 363

   
        73. அன்னை யழுக வவரழுக வையகோ
           என்னையாஞ் செய்வோ மிறைவனுக் கென்சொல்வோம்
           பி்ன்னை யெடுத்துப் பிடிக்கை கொடுதாங்கி
           அன்ன நடையா ரரண்மனையைச் சென்றடைந்தார்.

        74. எல்லவருங் கண்டா ரிஃதென் கொடுமையெனக்
           கொல்லென் றழுதார் கொடியோரா ருள்ளபடி
           சொல்லென்றார் கொல்லென்றார் தோகாய்நோ வில்லென்றார்
           புல்லென்று பட்ட பொருகளம்போ லாயினார்.

        75. பின்னர்ப் புனமயிலைப் பேரமளிக் கண்படுத்தார்
           துன்னினான் வேற்கரனும் சொன்னார் நடந்தவற்றை
           என்னரசீ நோகே லிதோபாரப் பாவிகளை
           உன்னைப்போல் வல்லே உருக்குலைப்பேன் காண்டிநீ.

        76. ஏகொடிய வாரியருக் கிவ்வளவோ வென்னரசீ
           மாகொடிய பாவிகளை மண்ணி னிடைக்கிடத்திப்
           பாகிலை வாய்ச்சியராற் பாவிகள் தம்முகத்தில்
           ஓகையொடு காறி யுமிழ்விப்பேன் காண்டிநீ.

        77. உன்னைச் சினைசிதைத்த வோகொடிய மாபாவி
           தன்னைச் சினைசிதைத்துத் தாயகமெல் லாம்போக்கிக்
           கன்னியர்கள் தங்களாற் காறி யுமிழ்வித்து
           மன்னற்குங் காட்டி வருவிப்பேன் காண்டிநீ.

        78. பெண்ணென்றும் பாராமற் பி்ள்ளைத் தனமாக
           மண்ணொன் றிடவுன்னை வன்கொலைசெய் மாபாவி
           கண்ணைப் பிடுங்கிக் கழுகுக் கிரையாக்கி
           உண்ணென் றவன்குருதி யூட்டுவிப்பேன் காண்டிநீ.

        79. சோலையுற் றேகூந்தல் தொட்டுச் சினைசிதைத்தோன்
           ஆலையுற் றோய்கன்ன லாமென் றிடக்கசக்கி
           வேலையிட் டேகை விரல்காது மூக்கறுத்தும்
           மாலையிட் டேயூர் வலஞ்செய்வேன் காண்டிநீ.

        80. இவ்வாறு செய்யே னிலையே லிகலாரைச்
           செவ்வேற் கிரையாகச் செய்வே னதுவின்றேல்
           ஒவ்வாப் பருவுடலை யோசுமந்து மீளாமல்
           தெவ்வோர் புகழ்ந்தாடச் செங்களத்து வீழ்வேனே.
-------------------------------------------------------------------------------------------
        73. பிடிக்கை - பெண் யானையின் கை. 76. பாகுஇலை - பாக்கு வெற்றிலை. 79. ஆலை - கரும்பாலை. ஓய்தல் - சாற்றுதல்.