8. கால றுந்தன ரோர்சிலர் கைய றுந்தன ரோர்சிலர் தோல றுந்தன ரோர்சிலர் தொடைய றுந்தன ரோர்சிலர் மேல றுந்தன ரோர்சிலர் விழிய றுந்தன ரோர்சிலர் வேலெ றிந்தொளிர் வாளெதிர் வில்லெ றிந்திட வீரரே. 9. எங்க ளன்னையைச் சினைசிதைத் தேற்ற மின்றியே கொன்றவன் எங்கை யோவவ னடிமைகா ளின்னு நீவி ருயிரிரோ அங்கை கூப்பிநீர் தொழுகினு மாவ தொன்றிலை யழிவலாற் செங்கை வேற்றமிழ் மறவர்கள் சீறி னாரின வடவரை. 10. அன்ன ராரிய ரம்பின்முன் னாற்ற லின்றிய ழியவே பின்னும் பின்னுந் தமிழ்ப்படை பெருகி வந்தமு னாகவே கன்ன வின்றதோட் செங்கரன் கனன்று சீறி யெழுந்துமே துன்னி னான்சிலை ராமனுந் தோன்றி னானவன் முன்னரே. 11. உற்ற விருவரு மொருவருக் கொருவர் வஞ்சினங் கூறியே செற்ற மீக்குற மறவருந் தேரு மற்றவு மொழியவும் வெற்றி தோல்விய தின்றியே வேலும் வில்லுமுன் பிகலியே பெற்ற நாளினு மன்னையர் பெரிது வக்கவே பொருதனர். 12. பூரியக் கொலை வேள்விசெய் புலைய ரல்லது புரிதவ ஆரியர்க்கிடை யூறுசெய் யாத வன்னையைக் கொல்பழி கார னேயெனச் சீறியே கனன்று மேல்வரு வாட்கரன் தேரி னோடொளிர் வேலையுஞ் சிதைத்து மேசிலை ராமனும், 13. எந்தை யெத்தனை தமிழரை யிரைகொ டுத்தனன் கழுகினுக் கந்த நாளினிற் றமிழகத் தரசு நின்றில வெதிரினில் முந்தை யுன்குலத் தாடகை முகமு குத்துயி ரிழந்ததை இந்த நாளிலே மறந்துநீ யெதிர்க்க வந்தது புதுமையே. 14. மன்னி வாழ்முனி வோர்தமை வருத்தி யோடெனத் துரத்திடும் உன்னை யன்றுன மன்னையு மொருங்கொ ழித்துயர் முனிவர்கள் இன்ன லின்றியே யென்றுமிங் கிருந்து வாழ்ந்திடச் செய்யவே என்னை யெந்தையிங் கேவினா ரென்ன வேதமிழ் மன்னனும், 15. நனவி லன்றியே செந்தமிழ் நாட்டை வெல்லுவ மென்றுநீ கனவு காணவும் விடுகிலேன் கழுகி னுக்கிரை யாக்குவேன் எனவெ குண்டொரு தடியினா லெறிய வேசிலை ராமனும் தனைம றித்துமோ ரம்பினாற் றலைய றுத்தன னையகோ. ------------------------------------------------------------------------------------------- 10. கல்நவில் தோள் - மலைபோன்ற தோள். 11. செற்றம் - சினம். முன்பு - வலி. இகல் - மாறுபாடு. 14. உன - உன்னுடைய. மன் - அரசன். | |
|
|