பக்கம் எண் :


இராவண காவியம் 375

   
         8.  வென்றிவடி வேல்மறவ ரோடுதமிழ் வேந்தன்
            ஒன்றுமனை யோடுவட வோருறையை யாலின்
            நன்றுதெரி கின்றதொலை நாடியரு காகச்
            சென்றுமறை வாய்த்தமது தேரினை நிறுத்தி,

         9.  மங்கையரு கோடிவிளை யாடவிள மானை
            இங்கொருவர் சூழ்ச்சியுட னேவிடுதல் வேண்டும்
            அங்குவரி ராமனை மழைத்திடு தொலைவில்
            மங்கையிளை யோவென வழுத்திடுதல் வேண்டும்.

         10. வந்தவிரு வோரையும் வளைத்தவ ணிறுத்தப்
            பைந்தொடியை மற்றவர் பதைப்புட னெடுத்து
            வந்திடுதல் வேண்டுமென மன்னவ னுரைப்பச்
            செந்தமிழர் அன்னபடி செய்திட முனைந்தார்.

         11. வானினுறை மீனையுடல் வைத்துமதி யொன்று
            ஏனவ ளிருந்திடு மிலைக்குடிசை முன்னர்க்
            கானினிடை யோடிவிளை யாடுமவள் கண்ணேய்
            மானினை மதித்தலை மடந்தையவள் கண்டாள்.

         12. கண்டமட மானதனைக் கானமட மானும்
            கொண்டுதரு கென்றவள் கொழுநனொடு கூற
            ஒண்டொடி யுவக்குத லுவக்குமிழி காமன்
            விண்டமட மான்றொடரி வில்லொடு நடந்தான்.

         13. மாதவள் மொழிதனை மறுக்கமன மில்லான்
            சீதைவயி னேதுமொரு தீதுமணு காது
            பாதுதருவா யெனவப் பாவியவன் றம்பிக்
            கோதிமட மான்விழி யுவப்புறவே சென்றான்.

         14. சென்றுமட மானதனைத் தேவியிடை யாக்கப்
            பின்றொடரி யன்னது பெயர்ந்தவிட மாகக்
            கன்றிய மனத்தொடு கருத்தொடுமு னாங்கண்
            துன்றிய தமிழ்ப்படைஞர் சூழ்ந்தனர் விளைத்தார்.

         15. செஞ்சொலி கெடுத்தனள் தினைப்புன மடைந்தே
            குஞ்சினை யிழந்திடு குரீஇயனென ராமன்
            செஞ்சிலை வளைக்கவெதிர் வேல்நிமிர வாங்கே
            பஞ்சவடி கேட்டிடு படித்தொலையி னின்றே.
-------------------------------------------------------------------------------------------
         11. விண்மீன் - புள்ளிகள். விளையாடும் மானினை. 15. குருஇயன் - குருவி போன்றனன்.