ஒருநாளி லேழெட்டுத் தேர்செய்யுந் தச்சன் ஒருமாத மாராய்ந்து கைசெய்த வுருளின் விரைவோடு வலிகொண்டு பொருதேம னொன்னார் விஞ்சாம லுயிருண்ணு மஞ்சாத மறவா. 71. பகையின்றி யேவந்து பகைதேடிக் கொண்ட பழிகார வடவோரை யொழியாம லெவரும் புகையொன்று மெரிபஞ்சுப் பொழிவீழ்ந்த தென்னப் புகலின்றி முதுசோரி யுகவென்று வருவேன் தொகைநின்ற நிரைகன்றின் பசிதண்ட மேவச் சுவையொன்று குழலோசை செவிகொள்ள வூதும் நகைவென்ற நறுமுல்லை மலர்முன்றில் தோறும் நல்லாயர் மல்வென்றி கொள்கான நாடா. 72. பொல்லாத வடவாரி யரைவென்று வாகை புனையேனேல் நமதன்னை மொழியான தமிழைக் கல்லாது காலங் கழித்தே யுயிர்க்குங் கடைகெட்ட தமிழ்மக்கள் அடியொற்றி வாழ்வேன் மெல்லோதி மார்தாழை வீழூச லேறி வெள்ளுப் பமைப்போர் விருந்துண் டுவப்பச் சொல்லாருங் காலை வரிபாடி யாடும் தொகுபுன்னை யங்கானல் சூழ்நெய்த னாடா. 73. ஐயாநீர் தட்டாமற் சிறியே னுவக்க அடல்வாகை புனையென்று விடைதந்தீ ராகில் உய்யாம லெரிமுன்னர் வைத்தூறு போல ஒன்னாரை யறவென்று வருவேனவ் வாறு செய்யேனே லெதிராளர் வாள்வீசி யாடச் செஞ்சோரி பாயுங் களப்பட் டொழிவேன் பொய்யாத மொழிவல்ல புலவோர்கள் பாடும் பொன்றாத புகழ்கொண்ட பொருவற்ற வெந்தாய். ------------------------------------------------------------------------------------------- 71. சோரி - இரத்தம். நிரை - பசுக்கூட்டம். தண்ட - நீங்க. நகை - பல். மல் - உடல்வலி. 72. அடியொற்றி - பின்பற்றி. ஓதி - கூந்தல். விருந்து - புதிய அழகு. கானல் வரி - ஒருவகைப் பாட்டு. 73. அடல் - வெல்லுதல். எதிராளர் வாள்வீசி ஆடல் - எதிர்பொருது பட்டவனைப் பகை மறவர் சூழ்ந்து வாளை வீசிக் கொண்டாடுதல். | |
|
|