2. தமிழர்பே ரவையை விட்டுச் சலிப்புட னெழுந்து சென்ற உமிழகத் துயிர்கொல் நஞ்சை யுடையபாம் பனைய பாவி தமிழருக் கியல்பா யுள்ள தன்மதிப் பதனை நீத்துத் தமிழருக் கழிவு காணத் தன்னலத் துறைபுக் கானே. 3. கரவிடை மருவி வாழுங் கள்வரின் களவுக் கேற்ப இரவிடை யுதவி செய்யு மிருளினு மிருண்ட நெஞ்சன் அரவிடை யமரு நஞ்சு மஞ்சிடச் செய்யும் வஞ்சன் புரவிடை யழிவு செய்யும் புன்மையிற் றலைப்பட் டானே. 4. வாலியின் றம்பி போல வாழவைத் திடுவே னென்று போலிமுன் சொன்ன சொல்லின் பொருளினை யுண்மை யாக்கும் வேலையின் முனைந்து பாயும் வேங்கையை யடைய வெண்ணும் காலியி்ன் கன்று போலக் கயமையின் றலைநின் றானே. 5. தன்னுடன் வருவ தாகத் தாமுன மொப்புக் கொண்ட நன்னெறி கடந்த நீலன் முதலிய நால்வ ரோடு புன்னெறி யுடையா னோடிப் போய்ப்பகைப் புலத்தி ராமன் தன்னடி யுறையாய் வாழத் தான்புறப் பட்டா னம்மா. 6. கோவிலை யகன்று மாடக் கொடித்தெரு வதனைத் தாண்டிப் பாவல ருள்ளம் போன்ற பழம்பெரும் பதியை நீங்கிக் காவினை யழித்துப் பூவின் கடிமணங் கொள்வான் போன்ற பாவியும் பகைவர் தங்கும் பாடியைக் குறுகி னானே. 7. தன்னினத் தமிழர் சாவைத் தனதுவாழ் வாக வெண்ணித் துன்னலர் துணையை நாடித் துறந்துநாண் மானத் தோடு நன்னெறி யிதுதா னென்று நடந்தவத் தீயோர் தம்மை இன்னலர் பாடி காத்தாங் கிருந்தகா வலர்கண் டாரே. 8. யாரென வன்னார் கேட்ப அடிமைநா ணாது தானின் னாரென வந்த வாற்றை யறையவே யொருவன் சென்று பூரியன் வரவு கூறப் புதைபொரு ளடைந்தாற் போல ஆரிய னுவந்து கூவி யனுமனைப் புகழ்ந்து பின்னும், ------------------------------------------------------------------------------------------- 3. புரவு - காப்பு, இங்கே தமிழர். 4. காலி - மாடு. 5. அடியுறை - அடிமை. | |
|
|