பக்கம் எண் :


இராவண காவியம் 465

   
          9.  மற்றவர் தமக்கு முற்ற வரன்முறை சொலவெல் லோரும்
              பெற்றனம் பெரும்பே றென்னப் பெருமகி ழாழி வீழ்ந்தாழ்
              வுற்றனர் முன்னைக் கொன்ற வொப்புயர் வில்லா நல்லோன்
              கொற்றவில் லவனைப் போற்றிக் குறிபிழை யாத வில்லோய்.

          10.  தன்னரு முறவு தன்னைத் தான்மதித் திலனென் றாலும்
              தன்னுடன் பிறந்த தங்கை தனைமறப் பானோ முன்னை
              இன்னலர் நகரை முற்ற இடர்க்கடல் வீழ்த்து வந்தோன்
              தன்னைநம் புதல்நீ தென்னத் தன்னையு மறந்து சொன்னான்.

          11.  அவ்வகை யெண்ண வேண்டா ஐயநீ யடைந்த வாறே
              எவ்வகை யேனு மன்னா னெய்தவே யிலங்கைச் செல்வம்
              செவ்விதி னடைந்தா னீங்குச் சிறிதுமே ஐய மின்றாம்
              உய்வகை யாக்கல் மேலும் உறுதியென் றனுமன் கூற.

          12.  நன்றுநன் றென்றார் மற்றோர் நன்னெறி யில்லா ராமன்
              அன்றொரு போது மன்னா னறைந்தசொல் லதனைத் தட்டான்
              பொன்றினும் புகலா வந்து புக்கரை விடல்நன் றன்றே
              சென்றுநீ கொடுவா வென்றச் சிறுமதி யவனை யேவ.

          13.  முன்னனைப் பிறனாற் கொன்று முடிபுனைந் தரச னானான்
              அன்னதை யவாவி யேயாங் கடுத்தவன் றன்னைக் கிட்டி
              மன்னவா விராமற் காண வருகெனச் சொல்லா முன்னம்
              புன்னெறி யுடையான் சென்று புகலென வடியில் வீழ்ந்தான்.

          14.  வீழ்ந்தெழுந் துரிமைச் சுற்றம் வெறுக்கினும் புகலா வந்து
              தாழ்ந்தவர் தமைக்கை நீக்காத் தகுதிமேம் பட்ட வுன்னைச்
              சூழ்ந்ததீக் குடும்ப மென்னும் தொடர்பறுத் துய்ந்தார் போல
              வாழ்ந்தன னெளியேன் சார்ந்து மழையெனப் பொழியும் வில்லோய்.

          15.  உன்மனை தன்னைவிட்டு விடும்படி யொருபோ தல்லப்
              பன்முறை யெடுத்துச் சொன்னேன் பாவிகேட் டானோ வி்ல்லைக்
              கன்மன முடையா னென்னைக் கடிந்துநீ நாட்டை விட்டுச்
              சென்மெனத் துரத்த வந்து சேர்ந்தனன் புகலா யுன்னை.
-------------------------------------------------------------------------------------------
          9. ஆழி - கடல். 12. அன்று - அல்ல.