பக்கம் எண் :


இராவண காவியம் 467

   
          2.   ஓடிவந்து படபடக்க ஒற்றர்கள் வணங்கவே
              கூடுமான தின்னவென்று கூறுக வெனவவர்
              ஈடிலா விலங்கையாளு மிறைவவாழி வாழிநம்
              பீடணன் செயலெமக்கு பேசவெட்க மாகுதே.

          3.   ஐயனேயென் சொல்லுவோம தறையநா வெழவிலை
              வெய்யனோ வறிவிலாத வீணனோ இரண்டகஞ்
              செய்யவேண்டு மென்றுகாலந் தேறியெவ் வளவுநாள்
              துய்யனே யிருந்தனோவச் சொரணையற்ற கடைமகன்.

          4.   எந்தையேயென் சொல்லுவோ மிரண்டகன் செயலினை
              சிந்தையில் நினைக்கவுந் திடுக்கிடு தடுக்கிலான்
              வெந்தபுண்ணில் வேனுழைக்கும் வீணர்போல வாரியர்
              நந்தவேநம் மூரைவிட்டு நடந்தனன் பகைப்புலம்.

          5.   அன்றுவந்த வனுமனு மடைந்துபீட ணன்மனை
              வென்றிவாலி கொலையினை விளம்பியாவ லூட்டிநீ
              சென்றுசேறின் வடவனைச் சிறந்தசுக்கி ரீவனின்
              ஒன்றிவாழ வைப்பனென் றுளவுகூறிச் சென்றனன்.

          6.   உளவுவந்த வனுமன்சொல்லை யுறுதியாகக் கொண்டுமே
              களவுகொண்ட கள்வர்போலக் கவலைகொண்ட முகமுடன்
              அளவுகொண்ட படைவலார்க ளானநால்வ ரோடவன்
              குளமகன்ற பறவைபோலக் குந்தியாங்கு வந்தனன்.

          7.   கொடியரான நீலன்வேலன் குயிலன்நேரி யாகிய
              படைவலாரி னோடுகூடிப் பழிமலிந்த பாவியும்
              வடவராமன் றனையடைந்து மலரடி பணிந்துமே
              அடிமையாகி யவணுளானவ் வறிவிலாத வடவனும்.

          8.   அடிமைதன்னை யிலங்கையாளு மரசனாக்கி யவனதா
              முடிபுனைந்து துணைவனாக்கி மூண்டசேனை சூழ்தர
              விடியுமுன்ன ரிலங்கைதன்னை வென்றுதந்து மீள்வதாய்
              மடவனீது புகலவோடி வந்தமென் றுரைத்தனர்.

          9.   அவ்வுரைசெ விபுகாமு னண்ணலுங் கொதித்தெழாக்
              கொவ்வையென்ன விருகணுங் குறுக்கினிற் சிவப்புற
              ஒவ்வுமொவ்வு மடிமைவாழ்வ துணர்விலாத விரண்டகற்
              கெவ்வகையு மொவ்வுமென் றிதழ்கடித் தழன்றுமே.
-------------------------------------------------------------------------------------------
          8. மடவன் - அறிவற்றவன்.