10. உடன்பிறந்த விளவலென்னு முரைகழிந்தின் றோடென துடன்றிந்த பகைவனென்னு முரைவழங்க ராமனுக் குடன்பிறந்த வடிமையான வொப்பிலாத பாவியை உடன்பிறந்த கழலையென்ன வுயிர்குடிப்ப னாளையே. 11. என்னையொத்த வாலியோ டெழுந்தசுக்கி ரீவனாம் தன்னையொத்து வடவராமன் றன்னையுற் றடைந்தவன் முன்னையொத் திங்கென்னையு முடிக்கவெண்ணுங் கொடியவன் தன்னையொத்த கொடியரிந்தத் தமிழகத்தி லுண்டுமோ. 12. நம்பினோரைக் கொன்றொழிக்கு நல்லபாம்பி னல்லவன் தம்பியாக வந்தெனக்குத் தான்பிறந்து பசியடுங் கம்பளித்துக் களைவளர்க்குங் கயவனுக் கடிமையாய்க் கொம்பைவெட்டுங் கோடரிக்குக் கொடியகாம்பு மாயினான். 13. புகலவெட்க மாகுதென்ன புதுமையோ வுலகினிற் பகலிருக்கு மளவுமிக்க பழியிருக்க வேகுலப் பகைவனுக் கடிமையான பாவியைத் தமிழரெவ் வகையினிற் கொலாதுவிட்டு வைப்பரோ வறிகிலேன். 14. படைக்கலந் தரித்தநாலு பதர்களோடு கூடியே நடைப்பிணந் தனைத்தக நடந்துசென்றி ராமனை அடைக்கலம் புகுந்தபாவி யறிவிருந்த தெண்ணவே மடைக்கல மெடுத்தகன்ற மங்கைபோலு நல்லளே. 15. எதிரிவந்து நகரைமுற்ற விருக்குநல்ல வேளைபார்த் ததரிலாத வதரிலேகி யாரியர்க் கடிமையாய்ப் புதரிருக்கும் புலியையூரிற் புகுதவைப்பர் போலிய பதரையெண்ண வெண்ணவுள்ளம் பதைபதைக்கு தையகோ. 16. அரசுவேண்டு மென்றெனக் கறிவுறுத் திருப்பனேல் வரிசையோடு முடிபுனைந்து மன்னனாக்கி டேன்கொலோ பரிசிலாக வடிமைகொண்டு பகைவராற் றரப்படின் தரிசுகண்ட நிலமதோசெந் தமிழர்கள் பொறுப்பரோ. 17. களவுகொண்ட கள்வர்போலக் கையுங்காலுங் கொண்டுமே பளகுகொண்ட பதர்களான படைத்தலைவர் தம்முடன் உளவுகொண்ட வொருவனாகி ஓடினானை நாளைநாம் விளிவுகொண்ட மாயினந்த மேவலர் சிரிப்பரே. ------------------------------------------------------------------------------------------- 10. கழலை - உடலிற் றோன்றுங் கட்டி. 14. மடைக்கலம் - சோற்றுப்பானை. 15. அதர் - வழி. 17. பளகு - குற்றம். விளிவு - சாவு. மேவலர் - பகைவர். தம்மினத்தினரையே கொல்கிறாரெனச் சிரிப்பர். | |
|
|