பக்கம் எண் :


இராவண காவியம் 469

   
          18.   மானமின்றிப் பகைவனான வடவனுக் கடிமையாய்ப்
               போனபேடி தன்னைவீண் புலப்பதாற் பயனிலை
               யானையோடு குதிரைதே ரருந்திறல் மறவராஞ்
               சேனையோடு காலையே செருக்களம் வகுக்குவீர்.

          19.   என்றுதானை மன்னருக் கியம்பவத் தலைவரும்
               சென்றனர்வ ணங்கியன்ன செய்யவே திறலொடு
               குன்றெனவு யர்ந்தமாடக் கோயிலைக் குறுகியே
               வென்றிகாணும் வேளைநாடி வேந்துகண் வளர்ந்தனன்.

          20.   ஊரைவிட் டிரண்டகஞ்செய் தோடினோரை யொப்பவிப்
               பாரைவிட் டிருளெனும் பகைத்திர ளகலவே
               தாரைவெட்டி வாகைசூடுந் தமிழராண்மை காணவே
               காரைவெட்டிக் கதிர்பரப்பிக் கதிரவ னெழுந்தனன்.
 
5. போர்க்கோலப் படலம்
 
கலி விருத்தம்
 
          1.    சிற்றறி வுடையவன் சென்றி ராமனை
               உற்றதை யொற்றரா லுளவு கண்டனம்
               நற்றமிழ் மறவர்கள் நவையில் வெஞ்சமர்க்
               கொற்றம துடையபோர்க் கோலங் காணுவாம்.

          2.   பகலவன் செங்கதிர் பரப்பி வல்லிருட்
               பகைகெடக் கிழக்கினிற் றோன்றப் பாங்குடன்
               தொகுகதிர் வேலவன் சொன்ன சொற்படி
               தகைமிகுந் தமிழ்ப்படைத் தலைவர் சட்டென,

          3.   ஊனினை யுண்டுட லோம்பு மாரியத்
               தானையோ டவனையுஞ் சாம்ப லாக்கவே
               ஏனெனு முன்னுடன் றெழுக வென்னவே
               யானையின் மிசைமுர சறைவித் தாரரோ.

          4.   போர்முர சொலிசெவி புகாமுன் மள்ளர்கள்
               கார்முக விடியெனக் கனன்று சீறியே
               நீர்மரு வியநில நெளிய வாரியப்
               பேர்வெறு வியதெனப் பேசி யார்த்தனர்.
-------------------------------------------------------------------------------------------
          20. தார் - ஒருவகைப் படைவகுப்பு. கார் - இரவு. 1. நவை - குற்றம், தவறு. கொற்றம் - வீரம். 3. அவன் - ராமன். உடன்று - சினந்து. 4. வெறுவியது - இல்லையாகும்.