5. இத்தனை நாளு மிரண்டு தோள்களும் செத்தவன் கைகளிற் றேம்பி வீண்படப் பொத்திய தசைப்பொதி பொறுத்து வெம்பிட வைத்தன னிறையென வருந்து வார்சிலர். 6. பழந்தமி ழகத்திடைப் பகையின் றாயதாற் செழுங்கதிர் விளைந்திடாச் செய்யி் னச்செயின் உழுந்தொழில் புரிந்திடா வுழவர் வாழ்வெனக் கழிந்தன பகலெனக் கலங்கு வார்சிலர். 7. தண்டமி ழகத்திடைச் சமரின் றாயதால் உண்டன மொக்கலோ டுவப்பக் கண்டுயில் கொண்டன மெழுந்தனங் குருதி யாற்றினைக் கண்டன மிலையெனக் கனலு வார்சிலர். 8. அருந்தமி ழகத்திடை யமரின் றாயதாற் கருந்தனந் தேடியுங் கலவை பூசியும் வருந்தினர்க் குதவியும் வைகல் போக்கியா மிருந்தனம் வீணிலென் றினையு வார்சிலர். 9. செந்தமி ழகத்திடைச் செருவின் றாயதால் முந்தையோ ரொழுகிய முறையிற் றப்பியே வெந்தசோ றுண்டுநாள் வீணிற் போக்கியே வந்தன மெனவுளம் வருந்து வார்சிலர். 10. இளமையும் வலிமையு மீடுஞ் செல்லுறக் கிளையொடு நட்பொடுங் கெழுமி்ப் பல்வகை வளமுட னுண்டுடீஇ வாழ்ந்த தன்றிநாட் களமறிந் திலமெனக் கவலு வார்சிலர். 11. விஞ்சிய நிரைகவர் வெட்சி வேய்ந்திலம் வஞ்சியுஞ் சூடிலம் மண்பொ தின்மையாற் றுஞ்சிகல் தும்பையுஞ் சூடி லோமெனா எஞ்சிய நாட்களை யெண்ணு வார்சிலர். 12. கானிடை நடந்தருங் களவில் வந்துநம் ஆனிரை கவர்ந்துசெல் லவரை வீட்டியவ் வானிரை மீட்கில மரிது பல்பகல் போனது வறிதெனப் புலக்கு வார்சிலர். ------------------------------------------------------------------------------------------- 6. செய் - விளைநிலம். 8. கருந்தனம் - பெரிய செல்வம். வைகல் - நாள். 11. இரு நாட்டிடைப்படும் பொதுநிலம் பெறுவது வஞ்சியாகும். துஞ்சு இகல் - சாதற்குக் காரணமான போர். 12. வீட்டி - வென்று. புலத்தல் - வெறுத்தல். | |
|
|