13. கிடங்கிடை யுதிரிலை கெழுமத் தெவ்வரை அடங்கவே யேப்புழை யம்பு தொட்டிலம் ஒடுங்கிய மனத்துட னுண்டு டுத்துவீண் முடங்கின மெனக்கையை முறுக்கு வார்சிலர். 14. என்றுமே யேணியி லேறிக் கண்டிலம் ஒன்றிய பதணத்தி னூடுஞ் சென்றிலம் மன்றிடை யாடியும் வயிற்றை யோம்பியும் சென்றன வகவெனச் சிணுங்கு வார்சிலர். 15. தண்ணெனக் குளிரிய தமிழ கத்திடை எண்ணிலா நாட்களா விகல தி்ன்மையாற் புண்ணிலா மார்பினைப் பொறுத்து வெற்றுணா உண்ணியே கழித்தமென் றுறுமு வார்சிலர். 16. அமிழ்திலை யெனவிலா தளித்த லன்றியே திமிரிய வெமதுதோட் டினவு தீர்ந்திட அமரினை யளித்தில னறந்த வாதசெந் தமிழிரா வணனெனச் சலிக்கு வார்சிலர். 17. இத்தனை நாட்களா வெதிரி யின்றியே பொத்திய வுறையினுட் பொதிந்து மாழ்கினிர் அத்தனை போதுமின் றளிக்கு வேமென முத்தமிட் டொளிறுவாள் முனையை நோக்குவர். 18. ஆலிலை பிசைந்தவ ரன்னை மாரழக் சேலையைப் போர்த்தவர் தேவி மாரழச் கோலிய களத்திடைக் குவிக்கு வீரென வேலிலை நுனியினை வெகுண்டு நோக்குவர். 19. துடிகறங் கிடக்கழற் றொழுதி யார்த்திட நொடியினிற் பகைத்திரள் நொடிய வென்றியாம் அடைகுவ மென்னவே டாணி மேவிய கொடியினை யுயர்த்தியே கூடி யாடுவர். ------------------------------------------------------------------------------------------- 13. கிடங்கு - அகழ். உதிர் இலை கெழும் - கரையிலுள்ள மரத்திலிருந்து கிடங்கின்கண் உதிரும் இலைபோல. ஏப்புழை - அம்பெய்யுந்தொளை; இது மதில் முடியிலுள்ள ஏவறையிலுள்ளது. 14. பதணம் - மதில் முடியிலுள்ள மதிலுள் மேடை. மன்று - மரத்தடிப் பொதுவிடம். அகவு - வயது. 16. அமிழ்து - சோறு. திமிரிய - வளர்ந்த. தினவு - ஊறல். தமிழ் இராவணன் - தமிழ், தமிழர். தமிழ்நாட்டிற்குடையவன். 18. ஆலிலை - வயிறு. கோலிய - ஏற்படுத்திய. 19. துடி - ஒருவகைப் பறை; முரசுமாம். | |
|
|