பக்கம் எண் :


514புலவர் குழந்தை

   
         24.  முதிரிய களைப்பி னோடு முனைப்பொடு பொரப்பின் வந்த
             பதரொரு கணையி னாற்றேர்ப் பாகனைக் கொன்றான் பாவி
             குதிரையைக் கொன்றான் கொல்லக் குலமகன் கனன்று பாய்ந்தோர்
             கதிரயி லேவப் பி்ன்னோன் கணையினா லறுத்து வீழ்த்தான்.

         25.  கடுங்கணை யேவி யேவிக் கையலுந் தனனென் றாலும்
             ஒடுங்கின னில்லை யோவா துறுகணை தூவி யார்த்தான்
             நடுங்கினர் வடவ ரெல்லாம் நாமினித் தப்போ மென்று
             மடங்கலி னாவ நாழி வறிதுபட் டொழிந்த தம்மா.

         26.  ஆயினு மிளைத்தா னில்லை அயின்முத லான கொண்டு
             சேயனும் பொருதா னந்தச் சிறியனோர் கணையை யேவித்
             தாயினு மன்பின் மிக்க தமிழர்கள் செல்வந் தன்னைக்
             கோயில்கை யறத்தி னோங்கிக் கோவெனக் கொன்றிட் டானே.

         27.  பராவிடத் தமிழ்ப்பா வாணர் பகையடுந் தமிழ மள்ளர்
             வராவிடத் தொருவன்றன்னை வளைத்துமே முறையொன்றின்றி
             அராவிடத் துறுநஞ் சன்ன வாரிய ராமன் றம்பி
             திராவிடக் கொழுந்தை யந்தோ திருகியே யெறிந்திட் டானே.

         28.  மாபெருங் கொலைஞ ரான மறையவ ருவந்து வாழ்த்த
             மாபெருந் தொலைவ னான வடமொழி யாளன் றம்பி
             மாபெருங் கலைஞ ரான வளமலி தருந்தென் னாடர்
             மாபெருந் தலைவர் தங்கள் மரபினை யொழித்திட் டானே.

         29.  ஓரின மக்கட் கன்றி யுதவிடா னெனுஞ்சொல் லேக
             கூரிய வடிவேல் கொண்டு குத்தியே பகைவர் தம்மைப்
             பாரிய விலங்கும் புள்ளும் பாத்துணக் கொடுத்த வள்ளல்
             ஆரிய ராமன் றம்பி யம்பினுக் கிரையா னானே.

         30.  கூடினர் வடவ ரெல்லாங் குளிர்ந்தன புறம்பு முள்ளும்
             பீடணன் முதலா னோர்கள் பெருமகிழ்க் கடலு ளாழ்ந்தாழ்ந்
             தாடினர் முனிவ ரெல்லா மருங்கவ லொழிந்தே யின்பங்
             கூடின மினியா மென்று குதித்துக்கூத் தாடி னாரே.
-------------------------------------------------------------------------------------------
         24. பதர் - இலக்குவன். பாவி - பீடணன். பின்னோன் - இலக்குவன். 25. மடங்கல் - சிங்கம். ஆவநாழி - அம்புக் கூடு. 26. கையறம் - கையறுநிலை, இரங்கல்.