பக்கம் எண் :


இராவண காவியம் 513

   
        17. வந்தேறி தன்னடிக்கீழ் மானமிலா தேவீழ்ந்து
           தந்தாளு மையே தமிழரசென் னாமுனவன்
           இந்தாரு மென்னவுனக் கீய வவன்பாட்டன்
           முந்தாநா ளீட்டிவைத்த மூலப் பொருளோகாண்.

        18. கூடப் பிறந்தவனைக் கொல்லக் குலப்பகைவன்
           கூடப்போய்க் கூடியபுன் கோடரிக் காம்பேயுன்
           நாடரிய சூழ்ச்சியெலா நானறிவே னீதப்பி
           ஓடிப் பிழைக்கவிடே னோகெடுவாய் நின்னில்லே.

        19. என்றலுமே சென்னி யெடுத்து முறுவலித்தே
           ஒன்றி யதுசொல்ல வோடென்ற தோடன்றி
           நன்றல்ல செய்தே நலங்கொல்லு மெம்முன்னைக்
           கொன்றுநலங் காத்திடவே கூடினே னாரியனை.

 
அறுசீர் வீருத்தம்
 
        20. என்றவ னுரைக்கச் சேயோ னெரியெனக் கனன்று சீறிக்
           குன்றன குவவுத் தோளாற் கொடுஞ்சிலை வளைத்தம் பெய்ய
           நின்றலக் குவனுஞ் சீறி நேர்பொர விருவ ரம்பும்
           ஒன்றையொன் றெதிர்ந்து தாக்கி யுருமென முழங்கிற் றம்மா.

        21. இருவரு முடன்று சீறி யினியுல கிலையென் பார்போல்
           ஒருவரை யொருவர் வெல்லற் குள்ளன வெல்லாஞ் செய்து
           பொருதனர் பகைவர் வெள்ளம் பொள்ளெனப் போந்து மொய்த்துப்
           பருதியின் வட்டம் போலப் பகழிதூஉய் வறிய தாய.

        22. ஆங்கவை தம்மை வீழ்த்தி யடுகணை மாரி பின்னும்
           ஊங்குபெய் தொருவ னாக வுஞற்றியே யலுப்பக் கண்ட
           தீங்குளான் றகுந்த வேளை சிதைக்குவாய் தாழ்க்கா தென்ன
           பாங்கிலான் பகழி தூவப் படையறுந் தவனுந் தூவ.

        23. ஆரிய னிளவல் சோர்வுற் றயரவப் பாவி தேற்றி
           நேரிய முறையொன் றின்றி நெடிதிகன் றலுத்தான் மீது
           கூரிய பகழி தூவிக் குறுக்கினிற் பொருதப் பின்னப்
           பூரியன் களைப்பு நீங்கிப் பொருதன னவனுங் கூட.
-------------------------------------------------------------------------------------------
        22. தீங்குளான் - பீடணன். பாங்கிலான் - இலக்குவன்.