வாழையடி வாழையென வந்தருள்மா பெருந்தலைவர் மரபைப் போக்கி ஏழையடி யவரானோ மன்செய்கோந் தமிழ்காத்த வெம்மீ ரெம்மீர். 58. தாயற்றுத் தந்தையற்றுத் தண்டமிழைத் தம்மவர்போற் றாங்க வந்த சேயற்று நில்லாது சிற்றப்பன் றனையற்றுச் சிறுமை யுற்றுக் காயுற்ற திறன்மறவக் கடலற்றுக் கையற்றுச் கண்ணு மற்று நோயுற்று மற்றொன்றுந் தோன்றாது பயனற்று நொந்தோம் நொந்தோம். 59. எங்கள்பெருந் தலைவர்களை யுண்டேப்ப மிட்டதுட னெழிலார் செல்வம் பொங்குபழந் தமிழகத்தை யடிமையெனும் படுகுழியிற் போட்டாய் போட்டுத் தங்கள்குலந் தனையழித்த தறுதலைக்கெங் களைக்காட்டித் தந்தா யந்தோ உங்குமிலா தாரியமே யடியோடு வருமுதலற் றொழியா யோநீ. | கலி விருத்தம் | 60. இன்ன வாறவ ரேங்கிய பின்னர்மா மன்ன னோடு மயிலை மகனைமன் பின்ன னோடு பெரியரை வைத்துமே கன்னி லைத்தநன் காட்டினை வாழ்த்தினர். 61. காடு வாழ்த்திக் கலைத்தமிழ்ச் செல்வர்கள் நாடு வாழ்த்தி நகரிற் புகுந்தனர் நாடு நீத்து நமக்குள கொள்ளவே காடு காத்த கடுங்கொலை யாளனும், 62. செடிமி குத்தவன் செந்தமிழ் வந்ததன் கடமை தப்பிக் கருந்தொழி லாளருக் கடிமை யுற்றுய ரண்ணனைக் கொன்றமா கொடிய னோடுயர் கோயிலை நண்ணினான். ------------------------------------------------------------------------------------------- 58. கையற்று - செயலற்று. கண் - அறிவு. 59. உங்கும் - எங்கும். 60. வைத்து - அடக்கம் செய்து. 62. செடி - தீமை. | |
|
|