பக்கம் எண் :


இராவண காவியம் 561

   
        28.  அறிவிலன் கொடியன் பாவி யயலவர்க் கடிமை யாகி
            இறைமகன் றன்னைக் கொன்ற விரண்டகன் விழவு காணக்
            குறுகிட வேண்டா வென்று கொடுமுடி மீது நின்று
            மறியல்செய் வனபோ லாடி வரந்தின கொடிக ளம்மா,.

        29.  உறவினர் வந்தா ரில்லை யுகந்தவர் வந்தா ரில்லை
            அறிவர்கள் வந்தா ரில்லை யமைச்சர்கள் வந்தா ரில்லை
            மறவர்கள் வந்தா ரில்லை மாதர்கள் வந்தா ரில்லைச்
            சிறுவரும் வந்தா ரில்லைத் தீயவன் கோயி லம்மா.

        30.  பாவலர் பாணர் கூத்தர் பாட்டியர் பொருநர் பாவல்
            நாவலர் புலவர் சூதர் நானில மினிது காக்கும்
            காவலர் மற்று முள்ள கனித்தமிழ் மக்க ளின்றி
            மேவலர் பாடி போல விளங்கின மாடக் கோயில்.

        31.  அடிமையைக் கோலஞ் செய்தே யரியணை தன்னி லேற்றிக்
            கடிமுர சிரங்கத் தெவ்வர் களித்துவாழ் கென்ன வாழ்த்த
            வடமகன் றமிழர்க் கெல்லா மாபெருந் தலைவ னென்றே
            முடிபுனைந் தான்கொ லூரார் முதலையாள் முறைமை போன்றே.

        32.  காட்டிடைப் பகைத்து வந்த காளையை மாக்க ளெல்லாம்
            கூட்டமாய்க் கூடிப் பற்றிக் கொண்டொரு கல்மீ தேற்றிச்
            சூட்டிநார் முடியாக் கட்குத் துலங்கிறை நீயே யென்ன
            நாட்டிடை விடுதல் போல நாடக நடந்த தம்மா.

        33.  பொன்முடி புனைந்த பின்னர்ப் பூரியன் மெய்காப் பாகத்
            தன்படை தன்னை வைத்துத் தமிழர்க ளுரிமை கொல்ல
            அன்புடன் முகமன் கூறி யாரிய னயோத்தி சென்றான்
            புன்படை யோடு முன்கொல் புல்லனுந் தன்னூர் சென்றான்.

        34.  ஆரியன் போய பின்றை யரசியற் பயிற்சி மிக்க
            பேரறி வாள ரின்றிப் பெரியதுஞ் சிறிது மான
            காரிய மெல்லாந் தானே கைக்கொடு தமிழர்க் காக்கும்
            மாரிய னென்ன வேகோ மாளிக்கூத் தாடி னானே.
-----------------------------------------------------------------------------------------
        31. இரங்க - ஒலிக்க, ஏங்க. களித்து - நீ களித்து. அடிமை யானானென அவர்கள் களித்து. 32. நார்முடி - தூக்கணங் குருவிக் கூடு. 34. கோமாளிக் கூத்து - கூத்தில் நடிப்போர் எல்லாராகவும் ஒருவன் தானே நடித்தல்.