23. ஒன்றிய வுறவைத் தன்னொடு வந்த வுயர்கொம்பைக் கொன்றொழி தெவ்வைப் புகலென மானங் கொன்றந்தோ இன்றல வென்று மேயொரு தமிழ ரிவனேபோற் சென்றவ ருண்டோ நன்றிது வென்றார் சிலமாதர். 24. இறையோன் காத்த தமிழக மென்னு மியல்காவைக் குறையா கென்று தின்றடி யோடு கொல்விக்கும் நறையான் போலத் தமிழர்கள் வாழ்வி னலங்கொல்லும் சிறையோ னானான் நன்றிது வென்றார் சிலமாதர். 25. பூப்போ லுள்ளம் புதுமணம் வீசும் புலவோர்செந் நாப்போ லென்றுந் தமிழர்கள் வாழ நலஞ்செய்யுங் காப்போல் வந்த விறையொடு தமிழர் கையுண்ணுந் தீப்போல் வந்தான் நன்றிது வென்றார் சிலமாதர். 26. சும்மாட் டோடு தலையி லிருந்த சுமைகொண்டே அம்மாட் டானைக் குப்புற வீழ்த்தே யழிகேணி இம்மாட் டிறையா னேயென் பான்போ லிளையோனும் செம்மாப் புற்றான் நன்றிது வென்றார் சிலமாதர். 27. அறம்பொரு ளின்பங் கண்டுயர் வுற்ற வறிவோனை மறம்பட வடவர் கழல்கால் யாத்து மருங்காட நிறம்பட வேலின் கூர்நுனி யஞ்சா நேர்நின்று திறம்பட வென்றான் நன்றிது வென்றார் சிலமாதர். 28. அம்மை யழத்தம் மப்ப னழத்தம் மன்பழவே தம்மின முற்றுங் கொன்று தொலைத்த தகவில்லான் இம்மெனு முன்னே நன்று புரக்கு மிறையாகிச் செம்மைய னொத்தான் நன்றிது வென்றார் சிலமாதர். -------------------------------------------------------------------------------------- 24. குறை ஆகு என்று - அழிகவென்று. சிறையோன் - அடிமை. 25. கா - சோலை, கை - ஒழுக்கம். 26. அ மாட்டான் - அந்த மாட்டுக்காரன். அழிகேணி - பாழ்ங்கிணறு. இறை - மாட்டுக் குரியவன். செம்மாப்பு - செருக்கு. பாற்குடங் கொண்டு செல்லும் மாட்டுக்காரனைக் கிணற்றில் தள்ளி மாடு கொண்டதுபோல், இறையைக் கொன்று உரிமை போக்கி அரசு கொண்டான். சும்மாடு - உரிமை. சுமை - ஆட்சி. மாடு - நாடு. 27. மருங்குஆட - சூழ்ந்தாட நிறம் - மார்பு. கழல்கட்டி யாட எனப் பழித்தது; பேடியென்றவாறு. | |
|
|