பக்கம் எண் :


இராவண காவியம் 567

   
        5.   புக்கது கேட்டதும் பொக்கென் றூரினர்
            மக்களி லாதகம் வறுமை யெய்திட
            ஒக்கவாண் பெண்ணெலா மொருங்கு போந்தவண்
            தொக்கனர் வருகெனத் தொடர்ந்து வாழ்த்தினர்.

        6.   ஆரிய நலாரவ னழகை யுண்டனர்
            ஆரியர் சீதையை யள்ளிக் கொண்டனர்
            ஆரிய னூரவ ரன்பைக் கண்டனன்
            காரிகை சீதையுங் கவலை விண்டனள்.

        7.   ஒட்டிய நண்பரு முரிமைச் சுற்றமும்
            மட்டிலாக் கிளைஞரு மதிய மைச்சரும்
            தட்டழிந் தினைதரு தாயர் மூவரும்
            நெட்டிழை யாரொடு நெருங்கிக் கண்டனர்.

        8.   ஆயிழை யோடுபின் னவனுந் தானுமாய்த்
            தாயர்கள் மலரடி தம்மின் மீதுவீழ்ந்
            தேயெழு முன்விழுந் திணைந்த மொய்கழல்
            தாயசத் துருக்கனைத் தழுவிக் கொண்டனன்.

        9.   கொத்தலர் குழலியுங் குளிர்ந்த நெஞ்சளாய்
            அத்தைமார் தங்களோ டளவ ளாவியே
            முத்தெனு முறுவலை முகிழ்த்துச் சட்டெனத்
            தொத்திய தங்கைமார் தொகையை மேயினாள்.

        10.   நம்பியும் பரதனன் னலமோ வென்றிட
            அம்புடை வில்லியா ளனுப்பி யுள்ளனன்
            உம்பியுன் வருகைதன் னுயிருக் கேமமாய்
            நம்பியுள் ளானென நவில நூல்வலான்.
        11.   சென்றுளா னெங்கெனச் செல்வ நிற்பிரிந்
            தன்றிருந் தயோத்தியை யகன்று போய்நலந்
            துன்றிய நந்தியூர் தன்னைத் துன்னியே
            நன்றுளான் மிதியடி நயந்து போற்றியே.

        12.  என்றலுந் தலைமகன் இனைந்து நானிதோ
            சென்றுகாண் பேனெனச் செல்வ வொல்லையே
            ஒன்றுவன் கோயிலை யுறுதற் குள்ளென
            நன்றென ராமனு நடத்தல் மேயினான்.
---------------------------------------------------------------------------------------
        7. நெட்டிழையார் - மனைவியர். 9. தொத்துதல் திரளுதல். 10. ஏமம் - காவல். நூல்வலான் - சுமந்திரன்.