13. தாரணிந் தேகுலத் தைய லோடணி தேரினி லேற்றியே சென்ற கன்றெரு ஈரிதழ் மலர்ந்திட வினிது நீங்கிப்போய்க் கூரொளி யவிர்மணிக் கோயில் நண்ணினர். 14. தெம்புட னொளிமணித் தேரி னின்றிழிந் தம்பெனுங் கண்ணியோ டகல விட்டிலாக் கும்பலி னின்றுபோய்க் கோயி லுட்புகுந் தெம்பியின் வருகைபார்த் திருக்கு நம்பியும். 15. கானகம் போனதுங் காப்பை நீத்ததும் மானினை யிழந்ததும் மதில்வ ளைத்ததும் வானுய ரிலங்கைமா மன்னனை வீழ்த்ததும் ஏனினு நிகழ்வெலா மிசைத்தி ருந்தனன். 16. ஒண்ணுத லெங்கைய ரோடு கோயி்லும் பண்ணையு மாயமும் பாவை பூவையும் வண்ணவொண் கிள்ளையு மானு மேனவும் கண்ணிணை களிப்புறக் கண்டு வந்தனள். 17. ஓடியே தூதுவ ருற்று நந்தியைப் பாடழிந் தினைந்திடும் பரதற் கண்டுமே காடகன் றண்ணலுங் கடிகொள் நன்னகர் கூடின னென்றுளங் குளிரக் கூறினார். 18. எழுதெழில் நந்தியி லிருந்த யோத்தியை அழுதழு தருவிநீ ரற்ற கண்ணொடும் பொழுதினை யெண்ணியே புலர்ந்த நெஞ்சொடும் பழுதர வாண்டவப் பரதன் கேட்டதும். 19. தொழுதகை யோடுபின் றொடரு வாரின்றி அழுதகண் ணோடெனண் ணாவென் றோடிப்போய் விழுதறு மரமென வீழப் பாரினிற் புழுதிகொள் ளடியிணை பூண்ட கைகளே. 20. காரியன் கண்டுளங் கசிந்து கைகளால் வாரியே யெடுத்துமார் பணைத்து வாருகண் ணீரினைத் துடைத்தவ னிலைமை கண்டுகண் மூரிநீ ராட்டியுள் முழுகப் புல்லினான். ---------------------------------------------------------------------------------------- 13. ஈர்இதழ் - இடதுபுற வீட்டு வரிசை. கூர் - மிகுதி. 20. காரியன் - அரசுபெறுங் காரியத்திற் கருத்தாயுள்ளவன். மூரிநீர் - மிக்கநீர். | |
|
|