பக்கம் எண் :


இராவண காவியம் 93

   
இராவண காவியம்
 
         1. பாயிரம்                              தமிழ்த் தாய்

கலி விருத்தம்
 
           1.     உலக மூமையா வுள்ளவக் காலையே
                 பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே
                 இலகி யின்றுநா னென்னு மொழிக்கெலாம்
                 தலைமை யாந்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்.

           2.     பின்னர் வந்து பிறந்து செருக்கொடு
                 முன்னர் வந்த மொழிபல வீயவும்
                 இன்னு மன்ன விளமைய ளாயுள
                 தன்னி கர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்.

           3.     கன்ன டந்தெலுங் கந்துளு வம்புயல்
                 மன்னி மேவு மணிமலை யாளமாம்
                 பொன்னின் மேனி திரிந்து பொலிவறு
                 தன்னை நேர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்.

           4.     மூவர் மன்னர் முறையொடு முன்புதம்
                 ஆவி யென்ன அருமையிற் போற்றிய
                 நாவின் மீது நடம்பயில் நாணயத்
                 தாவில் நற்றமிழ்த் தாயினைப் போற்றுவாம்.

           5.     மன்னை நேர்தரு வள்ளலும் மற்றரும்
                 பொன்னை யீந்தும்பொன் போன்றதம் இன்னுயிர்
                 தன்னை யீந்துந் தகவுட னோம்பிய
                 அன்னை நேர்தமி ழன்னையைப் போற்றுவாம்.

           6.     எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தினும்
                 பழுத்த வாய்மொழிப் பாவலர் பண்புற
                 இழைத்த பாத்தொகை எண்ணில வாய்வளந்
                 தழைத்த முத்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்.