பக்கம் எண் :

பக்கம் எண் :72

Manimegalai-Book Content
5. மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

கணவிர மாலை யிடூஉக்கழிந் தன்னை, புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந் தோர்" என உவமங் கூறியிருப்பது அறியற்பாலது. இடமென்று-இட மாகலின் புரந்தருறள்வரென்று.

53--57.   இவண் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு - இவ் விடத்திற்குரிய தன்மை அன்றென்று கூறி என்னையும் சினந்து, மையறு படிவத்து மாதவர் புறத்து எமைக் கையுதிர்க் கோடலின்- குற்றமற்ற தவவடிவத்தையுடைய சமண முனிவர்கள் புறத்தே போகுமாறு எம்மைக் கையை அசைத்துக் குறித்தலினால், கண் நிறை நீரேம்-கண்களில் நிறைந்த நீரினையுடையேமாய், அறவோர் உளீரோ ஆரும் இலோம் என - அறம்புரிவீர் இருக்கின்றீரோ பாதுகாப்போர் யாருமில்லாதேம் என்று, புறவோர் வீதியில் புலம் பொடு சாற்ற - புறத்திலுள்ள ஒரு வீதியில் வருத்தத்துடன் கூற ;

இவணீரல்ல - இவ்விடத்திற்குரியீரல்லீர் என்றுமாம் ; அல்ல என்பது பால்குறியாது வழக்குப்பற்றி நின்றது. என்னொடும் - என்னையும் ; உம்மை : எச்சம் ; தந்தையை என்னொடும் என்றுமாம். படிவம் - தவ வேடம். ஓர் புறவீதியி லென்க ; புறவோர் - புறத்திலுள்ளோர் என்றுரைப்பாருமுளர்.

58--70.  மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம் அங்கையிற் கொண்ட பாத்திரம் உடையோன் - வானளாவிய மாடங்களையுடைய மனைகள்தோறும் செல்லும் கையிற்கொண்ட பிச்சைப் பாத்திரத்தையுடையவனும், கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன்-ஞாயிறு காயும் நண்பகற் பொழுதில் குளிர்ச்சி பொருந்திய மதிபோலும் முகத்தினையுடையவனும், பொன்னில் திகழும் பொலம்பூ ஆடையன்-பொன்போல் விளங்கும் அழகிய ஆடையை உடையவனுமாகி, என் உற்றனிரோ என்று எமை நோக்கி-என்ன துன்பம் எய்தினீர் என்று எங்களை நோக்கி, அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால் - அன்பொடு கலந்த அருள் மிகுந்த இன் மொழிகளால், அஞ்செவி நிறைத்து நெஞ்சகம் குளிர்ப்பித்து- செவியகத்தை நிறைத்து உள்ளத்தைக் குளிரச்செய்து, தன்கைப் பாத்திரம் என்கைத் தந்து-தன் கையிலுள்ள பாத்திரத்தை என் கையில் கொடுத்துவிட்டு, எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க - என் தந்தைக்கு எய்திய துன்பம் நீங்குமாறு, எடுத்தனன் தழீஇக் கடுப்பத் தலையேற்றி-விரையத் தழுவி எடுத்துத் தன் உடம்பினிடத்தே சுமந்து சென்று, மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்-புத்த முனிவர்கள் உறைவிடத்தைக் காட்டிய மறையவனாகிய, சாதுயர் நீக்கிய தலைவன்-எந்தையின் இறப்புத் துன்பத்தை நீக்கிக் காப்பாற்றிய தலைவன், தவமுனி சங்கதருமன் - சங்கதருமன் என்னும் தவத்தையுடைய முனிவனாவான் ;