[அந்திமாலை
வந்து நீங்கியது. திங்கள்மண்டில் வெள்ளிக் குடத்தினின்று பால் சொரிவதுபோல்
தண்கதிரை எங்கணும் பொழிந் தது; மணிமேகலா தெய்வம் மீட்டும் புத்த தேவனது
பாதபீடிகையை ஏத்தி, அங்கு நின்ற சுதமதியை நோக்கி, ''நீங்கள் இங்கே நிற்றற்குக்
காரணம் யாது? என்ன துன்பமுற்றீர்கள்?'' என வினவ. அவள் உதயகுமரன் வந்து
கூறிச் சென்றதைச் சொல்லினள். சொல்லலும், அத்தெய்வம் அவளை நோக்கி,
"உதயகுமரனுக்கு மணிமேகலைபாலுள்ள வேட்கை சிறிதும் தணிந்திலது ; அறவோர்
வனமென்று இதினின்று அவன் அகன்றனனாயினும், இதனைக் கடந்து செல்லின் புறத்துள்ள
வீதியில் இவளை அகப்படுத்துவன் ; நீங்கள் இவ்வனத்தைச் சூழ்ந்த மதிலின்
மேற்றிசைக்கண்ணதாகிய சிறிய வாயில் வழியே சென்று மாதவர் உறையும் சக்கரவாளக்
கோட்டத்தை அடையின் யாதொரு துன்பமும் அணுகாது: ஆகலின் அங்கே சென்மின்."
என்றுரைத்தது. உரைத்தலும், சுதமதி, ''யாவரும் அதனைச் சுடுகாட்டுக் கோட்ட
மென்று கூறாநிற்பர் ; மாருத வேகனும் நீயுமே சக்கரவாளக் கோட்ட மென்று கூறுவீர்
; அதற்குக் காரணம் யாது? சொல்லுக.'' என்றாள்.
என்றலும் அத் தெய்வம், காவிரிப்பூம் பட்டினம்
தோன்றிய காலத்து உடன்றோன்றியதான அப்புறங்காட்டின் இயல்பனைத்தையும்
விளங்கக் கூறி, "தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர், ஈற்றிளம் பெண்டிர்
ஆற்றாப் பாலகர், முதியோர் என்னான் இளையோர் என்னான், கொடுந்தொழிலாளன்கொன்றனன்
குவிப்ப இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும், கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டயர்ந்து,
மிக்க நல்லறம் விரும்பாது வாழும், மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ?" என
அறஞ் செய்யாதார் பொருட்டு இரங்கி, "அத்தன்மையதான சுடுகாட்டில் தனியே
சென்று பேய்கோட்பட்டு இறந்த சார்ங்கல னென்னும் பார்ப்பனச் சிறுவன் தாயாகிய
கோதமையின் முறையீட்டைக் கேட்டுவந்த சம்பாபதி யென்னும் தெய்வம், "அணங்கும்
பேயும் ஆருயிர் கவரா ; நின் மகனது அறியாமையே பற்றுக் கோடாக இழவூழ் அவனுயிரைக்
கவர்ந்துசென்றது; நின் உயிரை வாங்கிக்கொண்டு அவனுயிரை அளித்தல் இயல்பன்று
! உயிர் உடம்பினின்று நீங்கின் அது வினைவழியே சென்று வேறு பிறப்படைவதில்
ஐயமில்லை; ''உலக மன்னவர்க்கு உயிர்க்குயிர் ஈவோர் இலரோ, இந்த ஈமப்
புறங்காட்டு, அரசர்க் கமைந்தன ஆயிரங்கோட்டம்'' அல்லவோ ? இச் சக்கரவாளத்
துள்ள தேவர்களில் யாரேனும் நீ கேட்ட வரம் கொடுப்பாருளராயின் யானும் அதனைத்
தருதற் குரியேனாவேன்," என்றுரைத்து, பிரம கணங்கள் முதலாகச் சக்கரவாளத்திலுள்ள
வரங்கொடுக்கும் ஆற்றலு டைய தேவர்களை யெல்லாம்வருவித்துக் கோதமைக்கு முன்னிறுத்தி,
இவளுற்ற துன்பம் இது ; இவளது வருத்தத்தைப் போக்குவீராக ,
|