பக்கம் எண் :

பக்கம் எண் :92

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

பூசல், அழுவிளியாகிய பூசல் என்க ; விளி - ஓசை. பயிர்தல் - அழைத்தல், 1"போழ்வாய்க்கூகை, சுட்டுக்குவியெனச் செத்தோர்ப் பயிரும், கள்ளியம் பறந்தலை" என்பதனால் பேராந்தை இறந்தோரை அழைக்குமென்பதும் போதரும். ஆண்டலை - ஆண்மகனது தலை போன்ற வடிவமுள்ள ஒருவகைப் பறவை; இதனை, 2;"நீண்ட பலி பீடத்தி லரிந்துவைத்த நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி, ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ" என்பதனானறிக. நெய்தலோசை முதலிய இன்னா இசையொலி கடலோதையின் என்றும் நின்றறாதென்க.

80-91. தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி - தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் உயர்ந்து, கான்றையும் சூரையுங் கள்ளியும் அடர்ந்து - கான்றையுஞ் சூரையுங் கள்ளியும் செறிந்து, காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டு ஈண்டும் - காய்கின்ற பசியையுடைய கொடிய பேய்கள் கூட்டமாகத் திரண்டிருக்கும், மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும் - முகில் தங்குகின்ற பெருங் கிளை களையுடைய வாகை மரம் நிற்கும் மன்றமும், வெள் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து - வெள்ளிய நிணத்தினைத் தசையுடன் உண்டு மகிழ்ச்சி மிகுந்து, புள் இறை கூரும் வெள்ளில் மன்றமும்- பறவைகள் தங்குகின்ற விளாமரம் நிற்கும் மன்றமும், சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீயுறுக்கும் வன்னிமன்றமும் - காபாலிகர் தளராத உள்ளத்துடன் சோறடுகின்ற தீயையுடைய வன்னிமரம் நிற்கும் மன்றமும். விரத யாக்கையர் உடைதலை தொகுத்தாங்கு இருந்தொடர்ப்படுக்கும் இரத்தி மன்றமும் - விரதங் காக்கும் உடம்பினை யுடையோர் உடைந்த தலைகளைத் தொகுத்துப் பெரிய மாலைகளாகச் செய்யும் இலந்தைமரம் நிற்கும் மன்றமும், பிணம் தின் மாக்கள் - பிணத்தினைத் தின்னும் மாக்களாயினார், நிணம்படு குழிசியில் விருந்தாட்டு அயரும் - நிணம் பொருந்திய பானையில் விருந்து செய்கின்ற, வெள்ளிடை மன்றமும் - வெளியான இடத்தையுடைய மன்றமும் ஆகிய இவ்விடங்களில்;

ஒடுவை-ஒடுமரம். உழிஞ்சில் - வாகை ; உன்னமுமாம். தான்றி முதலிய மூன்றும் மரமும், கான்றை முதலிய மூன்றும் செடியுமாம். மால்-மேகம். இறைகூர்தல்-தங்குதல். சுடலை நோன்பிகள்-மயானத்திலிருந்து நோன்பியற்றுவோர் ; காபாலிக சமயத்தோர். விரத யாக்கையர் -மாவிரத சமயத்தோர். பலர் கூடுமிடம் மன்ற மெனப்படும் ; பண்டை நாளில் மன்றங்கள் பெரும்பாலும் மரத்தடியில் இருந்தன ; பேய்கள் கூடுதலின் வாகையடி மன்றமாயிற்று ; இங்ஙனமே ஏனையவும் கொள்க.

92-6. அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் - தீப்பெய்த பானையும், புழல் என்னும் பண்ணியம் இட்ட கலனும், வெள்ளில


 1 புறம். 240.     2 கலிங்க. கோயில். 16.