பக்கம் எண் :

பக்கம் எண் :93

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

பாடையும் உள்ளீட்டறுவையும்-வெள்ளிலாகிய பாடையும் உள்ளே பண்டங்கள் இடப்பட்ட உறியும், பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் -பாடையிற்கட்டி அறுத்தெறிந்த மாலைகளும் உடைந்த குடங்களும், நெல்லும் பொரியும் சில்பலி அரிசியும்-நெல்லும் பொரியும் சிறுபலியாகிய அரிசியும், யாங்கணும் பரந்த ஓங்கிரும் பறந்தலை - எவ்விடத்தும் பரந்து கிடக்கும் மிகப்பெரிய பாழிடத்தில்;

புழல்-ஒருவகைச் சிற்றுண்டி. வெள்ளிற்பாடை: இருபெயரொட்டு.
உள்ளீட்டறுவை-உள்ளீட்டையுடைய கிழியுமாம். சில்பலி - சிறுபலி ; 1"தூவெள் ளரிசி, சில்பலிச் செய்து" என்பது காண்க. வாகைமன்றம் முதலிய மன்றங்கள் யாங்கணும் குழிசி முதலியன பரந்த பறந்தலை யென்க.

97-104. தவத்துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர்-தவநெறியிற் செல்லுந் துறவியர் மிக்க பெருஞ் செல்வமுடையோர், ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப்பாலகர் - ஈன்றணிமையையுடைய இளமகளிர் ஆற்றாத இளஞ்சிறார், முதியோர் என்னான் இளையோர் என்னான் - ஆண்டில் முதிர்ந்தோர் என்னாமலும் இளையோர் என்னாமலும், கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப - கொடுந் தொழிலை யுடைய காலன் கொன்று குவிப்ப, இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக்கண்டும் - அழல் வாயினையுடைய சுடலை தின்னக்கண்டும், கழிபெருஞ்செல்வக் கள்ளாட்டு அயர்ந்து - மிக்க பெருஞ்செல்வமாகிய கள்ளையுண்டு விளையாடுதலைச் செய்து, மிக்க நல்லறம் விரும்பாது வாழும் - மேன்மை தரும் நல்லறங்களை விரும்பாமல் வாழ்கின்ற, மக்களில் சிறந்த மடவோர் உண்டோ - மக்களிலுஞ் சிறந்த அறிவிலிகள் உளரோ;

என்னான் என்பதனைத் தவத்துறைமாக்கள் முதலியவற்றோடும் ஒட்டுக. கொன்றனன்; முற்றெச்சம். அழலாகிய வாய் என உருவகம். இகரச்சுட்டு அதன் கொடுமையை உணர்த்திற்று. ஆரிடையில் பறந்தலையில் சுடலை (49, 66, 101) என்க. பறந்தலையாகிய சுடலை யென்னலுமாம். அறிவை மயக்குதலின் செல்வத்தைக் கள் என்றார். ''தவத் துறைமாக்கள்......மடவோருண்டோ'' என்பது தெய்வங் கூறியது ; கவி கூறியதுமாம்.

105-6. ஆங்கது தன்னை ஓர் அருங்கடி நகர் என - அங்ஙனமாகிய புறங்காட்டை ஓர் அரிய காப்பமைந்த நகரமென்றெண்ணி, சார்ங்கலன் என்போன் தனிவழிச் சென்றான் - தனிவழியே சென்ற சார்ங்கலன் என்னும் சிறுவன் ;

107-9. என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று - என்புந் தசையும் குருதியுமாகியவற்றை உடம்பு என்று, அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி - அன்பு வைக்கின்ற மக்களுக்கு அறியக்கூறி, வழுவொடு


1  முருகு. 233-4.