பக்கம் எண் :

பக்கம் எண் :95

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

குமிழம்பூவோ அன்றி மூக்கோ, இதழோ கவிரோ - உதடோ அன்றி முருங்கை மலரோ, பல்லோ முத்தோ - பற்களோ அன்றி முத்துக்களோ, என்னாது இரங்காது-என்று கருதாமலும் இரங்காமலும், கண்தொட்டு உண்டு - கண்களைத் தோண்டி உண்டு, கவை அடி பெயர்த்து - கவைத்த அடிகளைப் பெயர்த்து, தண்டாக் களிப்பின் ஆடும் கூத்து - தணியாத களிப்புடன் ஆடுகின்ற கூத்தினை ;

என்னாது - என்று கருதி அதிசயிக்காது ; இஃது ஐயவதிசயத்தின் பாற்படும்: 1"கவையடிப் பேய்மகள்" என்றார் பிறரும்.

127-1. கண்டனன் வெரீஇ - கண்டு அஞ்சி, கடு நவை எய்தி - அப் பேயாற் பிடிக்கப்பட்டு, விண்டு - அவ்விடத்தின் நீங்கி, ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து - ஓர் திசையிற் கூப்பிட்டுக் கொண்டு சென்று, ஈங்கு எம்மனை காணாய் - எம் அன்னையே இங்கே காண்பாயாக, ஈமச்சுடலையின் - ஈமமாகிய மயானத்தின் கண் உள்ள, வெம்முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என - கொடிய முது பேய்க்கு என் உயிரைக் கொடுத்துவிட்டேன் என்று கூறி, தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் - தன் தாயின் முன்னே வீழ்ந்து உயிர் துறக்கவும் ;

சார்ங்கல னென்போன் தனிவழிச் சென்றோன் கண்டனன் வெரீஇ என்க. கடு நவை-மிக்க துன்பம் ; ஆவது-பேய்க் கோட்படுதல். 2;"கழல்கட் கூளிக் கடுநவைக் பட்டோர்" என்பதுகாண்க. ஈமச் சுடலை:இருபெயரொட்டு; ஈமத்தையுடைய சுடலையென்றுமாம். ஈமம்- பிணஞ் சுடும் விறகடுக்கு. மெய் வைத்தல் - உடம்பைப் போகடுதல் ; இறத்தல்.

132-41. பார்ப்பான் தன்னொடு கண் இழந்திருந்த - கணவனோடு கண் இழந்திருந்த, இத் தீத் தொழிலாட்டி என் சிறுவன் தன்னை- இக் கொடுவினையேனுடைய புதல்வனை, யாரும் இல் தமியேன் என்பது நோக்காது - யான் யாருமற்ற ஏழை யென்பதனைக் கருதாமல், ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ - அணங்கோ அன்றிப் பேயோ அரிய உயிரை யுண்டது, துறையும் மன்றமும் தொல் வலி மரனும் - நீர்த்துறைகளும் மன்றங்களும் பழைய வலி யுடைய மரங்களும், உறையுளும் கோட்டமும் காப்பாய் - தங்கு மிடங்களும் கோயில்களு மாதியவற்றின்கணிருந்து காத்து வருவோய், காவாய் தகவிலை கொல்லோ சம்பாபதி என-சம்பாபதியே நீ என் மகனுயிரைக் காவாமலிருந்தாய் தகவின்மையை யுடையையோ என அழைத்து, மகன் மெய் யாக்கையை மார்புறத் தழீஇ - மகனது உடலாகிய உயிரற்ற யாக்கையை மார்புடன் தழுவிக்கொண்டு; ஈமப் புறங்காட்டு எயில்புற வாயிலில் - இடு காட்டின் மதிற்புறத்துள்ள வாயிலில் நின்று, கோதமை என்பாள்


1 சிறுபாண். 197.     2 சிலப். 5-225.