பக்கம் எண் :

பக்கம் எண் :96

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

கொடுந்துயர் சாற்ற - கோதமை என்னும் பார்ப்பனி கொடிய துன்பத்தினைக் கூற ;

பார்ப்பன் - சார்ங்கலனுடைய தந்தை ; அவன் கண்ணிழந்திருந்தமை "கண்ணில் கணவனை" (6 : 155.) எனப் பின் வருதலானும் துணியப்படும். தீத்தொழிலாட்டி-பார்ப்பனி யென்றுமாம்; 1தீத்திறம் புரிந்தோன்" எனப் பார்ப்பனன் கூறப்படுதல் காண்க ; அங்கி காரியம் செய்பவன் என்றபடி. கணவனும் கண்ணிழந்தானாகலின் சிறுவனை யன்றித் தனக்குக் களைகண் இல்லை யென்பாள் ''யாருமில் தமியேன்'' என்றாள். நோக்காது - கருதாது ; நோக்கனோக்கம். மன்றம் - பலர்கூடும் வெளியிடம். தகவு இலை கொல்லோ-நின்னிடம் தகவு இல்லையோ என்றுமாம் ; தகவு - நடுவு நிலை ; எவ்விடத்தும் யாரையுங் காக்குந் தெய்வம் ஈண்டு இவனைக் காவாமையின் ''தகவிலை கொல்லோ'' என்றாள். கோதமை தகவிலை கொல்லோ என மார்புறத் தழீஇ வாயிலிற் சாற்றவென்க.

142-5. கடிவழங்கு வாயிலில் கடுந்துயர் எய்தி இடையிருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை - இருளையுடைய இடை யாமத்தில் பேய்கள் நடமாடுகின்ற இவ் வாயிலின்கணிருந்து கொடிய துக்கத்தினையடைந்து என்னை இப்பொழுது அழைத்தாய், என் உற்றனை எனக்கு உரை என்றே-நீ என்ன துன்பமெய்தினை அதனை எனக்குக் கூறுவாயாக என்று, பொன்னிற் பொலிந்த நிறத்தாள் தோன்ற - பொன்னைப்போல் விளங்கும் நிறத்தினை யுடைய சம்பாபதி தோன்ற ;

கடி - பேய். பொன்-சூரியன் என்பது அரும்பதவுரை. தோன்றி உரையென்று கூற என விகுதி பிரித்தொட்டுதலுமாம்.

146-9. ஆருமிலாட்டி என் அறியாப் பாலகன் - ஆருமற்றவளாகிய என்னுடைய அறியாச் சிறுவன். ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை - ஈமத்தினையுடைய புறங்காட்டின் வழியே வந்தோனை, அணங்கோ பேயோ ஆருயிர் உண்டது-அணங்கோ பேயோ அரிய உயிரை உண்டது, உறங்குவான் போலக் கிடந்தனன் காண் என- இதோ உறங்குபவன் போலக் கிடக்கின்றனன் காண்பாயாக என்று பார்ப்பனி உரைத்து வருந்த ;

150-3. அணங்கும் பேயும் ஆருயிர் உண்ணாது - அணங்கும் பேயும் அரிய வுயிரை உண்ணமாட்டா, பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக -நெருங்கிய முப்புரி நூலை யணிந்த மார்பினையுடையசார்ங்கலனது அறியாமையே பற்றுக்கோடாக, ஊழ்வினை வந்து இவன் உயிருண்டு கழிந்தது - ஊழ்வினையானது வந்து இவனது உயிரை உண்டு நீங்கியது, மாபெருந் துன்பம் நீ ஒழிவாய் என்றலும்-நினது மிகப்பெரிய துயரத்தை நீங்குவாயாக என்று தெய்வமுரைத்தலும்;


1 சிலப். 11 : 57.