[மணிபல்லவத்தினின்றும் நீங்கிய
மணிமேகலா தெய்வம், ''இரவு கழிந்தால் மணிமேகலை என் கை யகப்படுவாள்''
என்று வேட்கை நோயால் துயிலாதிருந்த உதயகுமரன் முன்தோன்றி, "மன்னவன்
மகனே, கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும், கோள்நிலை
திரிந்திடின் மாரி வறங்கூரும், மாரி வறங்கூரின் மன்னுயிர் இல்லை,
மன்னுயிரெல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிரென்னும் தகுதியின்
றாகும், தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த, அவத்திறம் ஒழிக"
என்று அவனுக்கு அறிவுரை கூறிவிட்டு, உவவனஞ் சென்று அங்கே துயிலும்
சுமதியை எழுப்பி, "யான் மணிமேகலா தெய்வம் ; இந்திர விழாக்
காண்டற்கு வந்தேன் ; நீ-அஞ்சாதே, மணிமேகலைக்குப் புத்தன் அற
நெறியிற் செல்லும் நற்பொழுது வந்துற்றதாகலின் அவளை யெடுத்துச்
சென்று மணிபல்லவத்தில் வைத்தேன் ; அவன் தனது பழம்பிறப்பின்
நிகழ்ச்சியையும் அறிந்துகொண்டு இற்றைக்கு ஏழாவது நாளில் இங்கு
வந்து சேர்வாள். இந்நகரில் வேறுவடிவம் கொள்வாளாயினும் உனக்கு
அவள் ஒளிப்பாளல்லள் ; அவள் இப்பதியிற் புகும்நாளில் பல அற்புதங்கள்
நிகழும் ; நான் வந்ததையும் மணிமேகலை நல்வழியிற் சென்றதை யும்
மாதவிக்குச் சொல்க : அவள் முன்னரே என்னை யறிவாள் ; கோவலன்
''நமது குலதெய்வத்தின் பெயரை இக்குழந்தைக்கு இடுக'' என்று சொல்லி,
என் பெயரை இவளுக்கிட்ட நாளின் இரவில் மாதவியின் கனவிற் சென்று,
''காமன் செயலற்றேங்க மாபெருந் தவக்கொடி யீன்றனை'' என்று நனவிற்
கூறியதுபோல நான் கூறியதுண்டு ; இதனையும் அவளுக்கு நினைப்பூட்டுதி,"
என்று கூறிப்போயிற்று.
பின்பு சுதமதி யெழுந்து மணிமேகலையின்
பிரிவால் வருந்தி. அவ்வனத்தைச் சூழ்ந்த மதிலின் மேற்புறத்திலுள்ள
சிறிய வாயில்வழியே சென்று, சக்கரவாளக்கோட்டத்தை யடைந்து,
ஆங்குள்ள உலகவறவியின் ஒருபுடை யிருந்தாள். அப்பொழுது அவ்விடத்தே
கந்தினை இடமாகக்கொண்டுள்ள தெய்வப்பாவையானது சுதமதி மருளும்படி
அவளது முற்பிறப்பின் வரலாற்றையும் இப்பிறப்பின் வரலாற்றையும்
கூறி விளித்து, ''மணிமேகலை தனது முற்பிறப்பையும் உனது முற்பிறப்பையும்
அறிந்துகொண்டு இற்றைக்கு ஏழாம்நாளிரவில் இந் நகர்க்கண் வருவாள்
; அவள் பிரிந்தது பற்றி நீ அஞ்சல்'' என்று கூறிற்று. அதனைக் கேட்டு
நெஞ்சம்நடுங்கிய சுதமதி, இரவு முழுதும் அவ்விடத்திருந்து, கதிரவன்
உதித்தவுடன் எழுந்து வீதிமருங்கிற் சென்று மாதவியை அடைந்து, முதல்நாளிரவு
நிகழ்ந்தவற்றைச் சொன்னவுடன் அவள் மாணிக்கத்தை இழந்த நாகம்
போன்று மிக்க துயரத்தோடிருந்தாள். சுதமதி மணிமேகலையின் பிரிவால்
இன்னுயிரிழந்த யாக்கைபோலச் செயலற்றிருந்தாள். (இதில், இராப்பொழுதின்
நிகழ்ச்சிகளும், விடியல்
|