பக்கம் எண் :

பக்கம் எண் :107

::TVU::
7. துயிலெழுப்பிய காதை

மணிமேகலை யான்-யான் மணிமேகலா தெய்வம் அஞ்சாதே இந்நகரின் இந்திர விழாக்காண வந்தேன், ஆதிசான் முனிவன் அற வழிப்படுஉம்-புத்த தேவனின் அறநெறியிற் செல்லும், ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின் ஏது நிகழ்ச்சி மணிமேகலைக்கு முற்றியதாகலின் விஞ்சையிற் பெயர்ந்நு நின் விளங்கிழைதன்னை-நின் மெல்லியலை என் வித்தையினாலே பெயர்த்து, ஓர் வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்-ஒரு வகையான வஞ்சனையும் இல்லாத மணிபல்லவத்தின்கண் வைத்துளேன் ;

துயிலிடை : உருபு மயக்கம், கோடணை - முழக்கம் ; பல்வகை முழக்கத்தினையுடைய விழாவிற்காயிற்று வினைகள் தம் பயனையூட்ட எதிர்ப்படுவதனை, ஏது நிகழ்ச்சி அல்லது ஏது என்பது பௌத்தநூல் வழக்கு.

23--29.    பண்டைப் பிறப்பும் பண்புஉற உணர்ந்து-முற்பிறவியையும் நன்கறிந்து, ஈங்கு இன்று ஏழுநாளில் இந்நகர் மருங்கே- இற்றைக்கு ஏழாம் நாளிலே இவ்விடத்து இந்நகரத்தின்கண், வந்து தோன்றும் மடக்கொடி நல்லான் - மடப்பம் பொருந்திய கொடிபோலும் மணிமேகலை வந்து தோன்றுவள், களிப்புமாண் செல்வக் காவற் பேரூர் - செல்வக் களிப்பாற் சிறந்த காவலையுடைய இப் பெரிய நகரத்தில். ஒளித்து உருவு எய்தினும் உன் திறன் ஒளியாள் - தன் வடிவத்தை மறைத்து வந்தாலும் நின்னிடம் மறையாள், ஆங்கு அவள் இந்நகர் புகுந்த அந்நாள் - மணிமேகலை இந்நகரத்திற்கு மீளவந்த அந்நாளில் ஈங்கு நிகழ்வன ஏதுப் பலவுள - ஈண்டு நிகழ்வனவாகிய ஏது நிகழ்ச்சிகள் பலவுண்டு;

தோன்றும்: முற்று. களிப்புமாண் செல்வம் என்பதற்குக் களிப்பு மாட்சி யுறுதற்குக் காரணமாய செல்வம் என உரைப்பினும் அமையும். புகுந்த என்பது கால வழுவமைதி.

30--40.    மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும்-மாதவிக்கு யான் வந்த வகையையும், ஏதம்இல் நெறி மகள் எய்திய வண்ணமும்- மணிமேகலை குற்றமற்ற வழியிற் சேர்ந்த தன்மையையும், உரை யாய் நீ - நீ கூறுவாயாக, அவள் என் திறம் உணரும்-அம் மாதவி என் வரலாற்றை உணருவாள், திரையிரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு எனக் கோவலன் கூறி இக்கொடியிடை தன்னை என் நாமஞ் செய்த நல்நாள் - கோவலன் அலைகளையுடைய பெரிய கடலினிடத்துத் தெய்வம் ஒன்று உண்டென்று கூறி இப் பெண் மகளுக்கு என் பெயரையிட்ட நல்லநாளில், நள்இருள்-இரவின் நடுயாமத்தே, காமன் கையறக் கடுநவை அறுக்கும் - காமன் செயலற்றுப்போகப் பெரிய துன்பங்களை அறுக்கவல்ல, மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே-மிகப் பெரிய தவமுடைய மகளைப் பெற்றனை என்று, நனவேபோலக் கனவகத்து உரைத்தேன் -