இளையாள் வரும் - தனது முற்பிறப்புடன் நினது முற்பிப்பினையும் அறிந்துகொண்டு
நினக்கு இளையாளும் இலக்குமியும் ஆகிய மணிமேகலை ஈண்டு வருவாள்,
அஞ்சல் என்று உரைத்தது - நீ அஞ்சாதே என்று கூறியது, அவ்வுரை கேட்டு
- அம்மொழி கேட்டு, நெஞ்சம் நடுக்குறூஉம் நேரிழை நல்லாள் - உள்ளம்
நடுங்கிய நேரிழையாகிய சுதமதி ;
பாவை தெய்வக் கிளவியின் உரைத்தது என்க.
111--126. காவலாளர்
கண் துயில்கொள்ள - ஊர்காவலருடைய கண்கள் உறக்கத்தைப் பொருந்த,
தூமென் சேக்கைத்துயில்கண் விழிப்ப - தூய மெல்லிய படுக்கையில்
துயில்கின்ற ஆடவர் மகளிருடைய கண்கள் விழிப்படைய, வலம்புரிச்சங்கம்
வறிது எழுந்து ஆர்ப்ப-வலம்புரியாகிய சங்குகள் பொருளின்றி, முழங்க,
புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்க-அறிவின்மிக்க புலவர் கூட்டம்
பொருளொடும் முழங்க, புகர்முக வாரணம் நெடுங்கூவிளிப்ப - புள்ளி
பொருந்திய முகத்தையுடைய யானைகள் நீண்ட கூப்பீட் டினைச் செய்ய,
பொறி மயிர் வாரணம் குறுங்கூ விளிப்ப-பொறிப் பொறியாகிய மயிர்களையுடைய
கோழிகள் குறிய கூவுதலைச்செய்ய, பணைநிலைப் புரவி பல எழுந்து ஆல
- பந்தியில் நிற்றலையுடைய குதிரைகள் பல எழுந்து ஆட, பணை நிலைப்
புள்ளும் பல எழுந்து ஆல-கிளைகளிலுள்ள பல புட்களும் எழுந்து ஒலிக்க,
பூம்பொழில் ஆர்கைப் புள்ஒலி சிறப்ப-பூஞ்சோலையில் மதுவுண்ணுதலையுடைய
வண்டுகளின் ஒலிமிக, பூங்கொடியார் கைப்புள் ஒலிசிறப்ப - பூங்கொடி
போன்ற மகளிருடைய கையிலணிந்த வளைகளின் ஒலி மிக, கடவுட் பீடிகை
பூப்பலி கடைகொள - கடவுளர்க்குரிய பீடங்களிற் கொடுக்கப்படும்
பொலிவுபெற்ற பலிகள் முற்றுப்பெற, கலம்பகர் பீடிகைப் பூப்பலி
கடைகொள-அணிகலங்கள் விற்கப் படுகின்ற ஆவண வீதியில் மலரால்
செய்யப்படும் பூசனையைக் கடையிடங்கள் கொள்ள, குயிலுவர் கடைதொறும்
பண்இயம் பரந்து எழ-தோற் கருவிகளைப் பயில்வோர் வாயில்தோறும்
இசையுடன் கூடிய இயங்களின் ஒலி பரவி மேம்பட, கொடுப்போர் கடைதொறும்
பண்ணியம் பரந்து எழ - கொடையாளர்களுடைய வாயில்தோறும் கொடுத்தற்குரிய
பல பண்டங்களும் பரந்து நிறைய, ஊர்துயில் எடுப்ப-ஊரினைத் துயில்
எழுப்புமாறு, உரவு நீர் அழுவத்துக் கார்இருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்-கடற்
பரப்பிலே கரிய இருளைக் கெடுத்து ஞாயிறு தோன்றுதலும் ;