பக்கம் எண் :

பக்கம் எண் :114

::TVU::
7. துயிலெழுப்பிய காதை

கட்கு இரவிற் பலி கொடுப்பாராகலின் அது முடிவுற்றதென்றார், பூ - பொலிவு. இல்லுறை தெய்வத்தின் பொருட்டுக் காலையில் பூவிடுதல் மரபாகலின் ''கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொள'' என்றார் ; கடை வாயிலுமாம் ; 1"பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி" என்பது காண்க. பண்இயம்-பண்ணப்பட்ட வாத்தியம் என்றுமாம்.

127--134.  ஏவுறு மஞ்ஞையின் இனைந்து - அம்பு பட்டுருவிய மயிலைப்போல உள்ளம் நைந்து, அடி வருந்த மாநகர் வீதி மருங்கில் போகி - அடிகள் வருந்தக் கடந்து பெரிய நகரத்தின் வீதிவழியே சென்று, போய கங்குலில் புகுந்ததை எல்லாம்-சென்ற இரவில் நிகழ்ந்தவற்றை எல்லாம், மாதவி தனக்கு வழுவின்று உரைத் தலும்-மாதவிக்கு வழுவாது கூறுதலும், நன்மணி இழந்த நாகம் போன்று அவள்-மாதவி நல்ல மணியை இழந்த அரவினைப்போல, தன்மகள் வாராத் தனித்துயர் உழப்ப - தன் மகள் வாராத ஒப்பற்ற துன்பத்தால் வருந்த, இன்உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் துன்னியது உரைத்த சுதமதிதான் என் - அவட்கு நேர்ந்ததைக் கூறிய சுதமதிதான் இனிய உயிரையிழந்த உடலைப்போல் அசைவற்றிருந்தனள் என்க.

புகுந்ததையெல்லாம் : ஒருமையிற் பன்மை. ''நன்மணி யிழந்த நாகம் போன்று'' (25 ; 195) என மேல் இந்நூலுள்ளும், 2"இரு நிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும், அருமணி யிழந்த நாகம் போன்றதும்" எனச் சிலப்பதிகாரத்திலும் மணியிழந்த நாகமும், 3"இன்னுயி ரிழந்த யாக்கை யென்னத், துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்" எனச் சிலப்பதிகாரத்தில் உயிரிழந்த யாக்கையும் உவமமாக வருதல் காண்க.

மணிமேகலா தெய்வம் நீங்கித் தோன்றி அவன்வயி னுரைத்த பின் புகுந்து நீக்கி உரையென்று போயபின், சுதமதி எழுந்து பல் வேறு ஓதையும் இசைப்பக் கேட்டு உளங்கலங்கி நீங்கிப்போகி ஒரு புடை இருத்தலும், பாவை தெய்வக்கிளவியின் "வரும், அஞ்சல்" என் றுரைத்தது ; அதனைக் கேட்டு நடுக்குறு நல்லாள் கதிரவன் முளைத்தலும் போகி, மாதவிக் குரைத்தலும், அவள் துயருழப்பத் தான் உயிரிழந்த யாக்கைபோல் இருந்தனள் என வினை முடிக்க.

துயிலெழுப்பிய காதை முற்றிற்று.


1சிலப். 28 : 231. 2 சிலப். 13 : 57-8. 3 சிலப். 13: 59-60.