[சுதமதி புகாரின்கண் செயலற்றிருக்க, மணிபல்லவத்திற்
கடலருகே மணலிற் றுயின்ற மணிமேகலை, துயிலுணர்ந்து தான் முன் பறிந்த
பொருள் ஒன்றும் காணப்படாது அறியாத பொருள்களே காணப்படுதலின்
வேறிடத்திற் சென்று பிறந்த உயிர் போன்றவளாகித் திகைப்புறும்
பொழுது கதிரவன் உதித்தான். உதித்தவுடன் அவள் ''இவ்விடம் உவவனத்தில்
முன்னம் கண்டறியாத ஒரு பகுதியோ ! இது நனவோ கனவோ என்பதை அறிகின்றிலேன்
; மனம் நடுங்குகின்றது : சுதமதி எங்கொளித்தாய் ? ஓர் மாற்றம்
தருகின்றிலை ; இருள் கழிந்தது; மாதவி வருந்துவள் ; இது விஞ்சையுடன்
தோன்றிய அம் மடந்தை செய்த வஞ்சமோ ! ஒன்றும் தெரியவில்லையே
! தனியே இருக்க மிகவும் அஞ்சுகின்றேன் ; விரைந்து வருவாயாக,''
என்று கூறிக் கொண்டு நீர்த்துறைகளிலும் மணற்குன்றுகளிலும் எங்கணும்
சென்று தேடித் தனக்குப் பாங்காயினார் ஒருவரையும காணாதவளாகிக்
கூவி அழுது வருந்துபவள், தன் தந்தையை நினைந்து ''கோற்றொடி மாத
ரொடு வேற்று நாடடைந்து, வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து, ஐயாவோ
!'' என்று அழுதனள் ; அழுபவள் முன்னர், இந்திரனால் இடப்பட்டதும்,
தரிசித்தோர்க்குப் பழம் பிறப்பைப் புலப்படுத்துவதுமாகிய புத்த
பீடிகை தோன்றியது.]