உரை
1--12. ஈங்கு இவள் இன்னணமாக - புகார்
நகரிலே சுதமதி இவ்வாறு வருந்த, இருங்கடல் வாங்குதிரை உடுத்த மணிபல்லவத்
திடை-பெரிய கடலினது வளைந்த அலைகளாற் சூழப்பட்ட மணிபல்லவத்தின்கண்,
தத்துநீர் அடைகரைச் சங்கு உழுதொடுப்பின் முத்து விளை கழனி-சங்குகளால்
உழுது விதைக்கப்பட்ட முத்துக்கள் விளைகின்ற மோதுநீர் சூழ் அடைகரையாகிய
கழனியில், முரி செம்பவளமொடுவிரைமரம் உருட்டும் திரை உலாப்பரப்பில்-வளைந்த
சிவந்த பவளங்களுடன் சந்தனம் அகில் முதலிய மணம்பொருந்திய மரங்களை
உருட்டுகின்ற அலைகள் உலாவும் கடற்கரையில், ஞாழல் ஓங்கிய தாழ்கண்
அசும்பின்-புலிநகக் கொன்றை உயர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய சேற்றில்,
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி - அல்லியும் குவளையுமாகிய
மலர்கள் சேர்ந்து கலந்து, வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி-வண்டுகள்
உண்ணுமாறு மலரப்பெற்ற ஆழமாகிய நீரினையுடைய பொய்கைக் கரையில்,
முடக்கால் புன்னையும் மடப்பூர் தாழையும் - வளைந்த அடியை யுடைய புன்னையும்
மடல்களாலாகிய பூவினையுடைய தாழையும், வெயில் வரவு ஒழிந்த பயில்
பூம்பந்தர்-வெயிலினது வரவை நீக்கிய அழகிய பந்தரின்கண், அறல்
விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளி - அறல் விளங்குகின்ற நிலாவைப்
போன்ற வெள்ளிய மணலில் நறிய மலர்களாலாகிய படுக்கையிலிருந்து,
துஞ்சு துயில் எழூஉம் அஞ்சில் ஓதி - மெய்மறந்த உறக்கத்தினின்றும்
எழுந்த அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மணிமேகலை ; |