[பீடிகையைக் கண்ட மணிமேகலை வியப்பினால்
தன்னை யறியாளாயினாள் ; அவள் கைகள் தலைமேற் குவிந்தன ; அதனை
மும்முறை வலம்வந்து பணிந்து எழுபவள் அதன் காட்சியால் தன் பழம்பிறப்பின்
நிகழ்ச்சிகளை யுணர்ந்து, "மாதவ! காயங்கரை யென்னும் நதிக்கரையில்
நீ கூறியவெல்லாம் உண்மையாதலை அறிந்தேன்; காந்தார நாட்டின்
அரசனாகிய அத்திபதி யென்னும் அரசற்கு மைத்துனனாகிய பிரமதருமனே!
நீ அவன்பாற் சென்று அறமுரைக்கையிர், ''இந் நாவலந் தீவில் இற்றைக்கு
ஏழாம் நாளிற் பூகம்ப முண்டாகும் ; அப்பொழுது இந் நகரும் நாகநாட்டில்
நானூறு யோசனைப் பரப்பும் பாதலத்தில் வீழ்ந்த கெட்டொழியும்:
ஆதலின் இதினின்றும் நீங்குக,'' என்ன, அரசனும் நகரிலுள்ள மக்கட்குப்
பறைசாற்றி யறிவித்து இடவயமென்னும் அப்பதியை நீங்கி, வடக்கிலுள்ள
அவந்தி நகர்க்குச் செல்வோன் இடையே காயங்கரையின் கரையிற்பாடி
செய்திருப்ப, நீ குறித்த நாளில் அந்நகர் அழிந்தது, அதுகண்ட அரசனும்
ஏனையரும் நின்னைச் சூழ்ந்து வணங்க. நீ அவர்கட்கு அருளறத்தைப்
போதித்துக் கொண்டிருந்தனை; அப்பொழுது அசோதர நகரத்தரசனாகிய
இரவிவன்மன்தேவி அமுதபதி வயிற்றிற் பிறந்து இலக்குமியென்று பெயரெய்தி,
அத்திபதி யென்னும் அரசற்கு நீலபதி யென்பவள்பாற் பிறந்த இராகுலனுக்கு
மனைவியாகப் புக்க நான் என் கணவனுடன் வந்து அறங் கேட்டற்கு வணங்கியவுடன்,
நீ என்னை நோக்கி, "இவ்விராகுலன் இற்றைக்குப் பதினாறாம் நாளில்
திட்டிவிடமென்னும் பாம்பால் இறப்பான், நீ இவனுடன் தீயிற்புகுவாய்;
பின்பு காவிரிபூம்பட்டினத்திற் சென்று பிறப்பாய் ; அங்கு நினக்கு
ஒரு துன்பம் உண்டாகும் ; அப்பொழுது மணிமேகலா தெய்வம் வந்து நள்ளிரவில்
உன்னை எடுத்துச்சென்று தென்றிசை மருங்கிலுள்ள தீவு ஒன்றில் வைத்துச்செல்லும்;
சென்றபின் ஆங்குள்ள புத்த பீடிகையைக் கண்டு தொழுவாய்; அப்பொழுதே
உனது முற்பிறப்பில் நிகழ்ந்த செய்திகளை அறிந்து, இன்று யான்
கூறிய உரையினைத் தெளிவாய்,'' என்று சொல்ல, "என் காதலன் பிறப்பையும்
தெரிவிக்கவேண்டும்" என்று கேட்டேன்; ''உன்னைக்கொண்டு சென்ற
தெய்வம் மீண்டுந்தோன்றி, உனக்கு அவனைப் புலப்படுத்தும்,'' என்று
கூறினாய் ; அத் தெய்வம் வராதோ?" என ஏங்கி அழுதுகொண்டிருந்தனள்.]