1-8.ஆங்கது கண்ட ஆயிழை அறியாள் - பீடிகையைக்
கண்ட மணிமேகலை தன்னை அறியாளாயினாள், காந்தள் அமசெங்கை தலை
மேற் குவிந்தன - காந்தள் மலர்போலும் சிவந்த கைகள் தலைமீது
குவிந்தன, தலைமேற் குவிந்த கையள் - தலைமீது குவிந்த கையை யுடையவள்,
செங்கண் முலைமேற் கலுழ்ந்து முத்தத் திரள்உகுத்து-சிவந்த கண்கள்
கலக்கிக் கொங்கைகளின் மேலே நீர்த்துளிகளைச் சொரிந்து, அதின்
இடமுறை மும்முறை வலமுறை வாரா - அப்பீடிகையின் இடமாக விருந்து மும்முறை
வலமாக வந்து, கொடிமின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன-மின்னுக்கொடி
முகிலுடன் நிலத்தையடைந்தாற்போல, இறு நுசுப்பு அலச வெறுநிலம் சேர்ந்தாங்கு
- இறும்படியான நுண்ணிய இடை வருந்துமாறு வெறு நிலத்திற் சேர்ந்து
வணங்கி, எழுவோள் - எழுகின்றவள், பிறப்பு வழுவின்று உணர்ந்து-தன்
முற்பிறவியைத் தவறின்றி அறிந்து ;
அறியாள் - தன்னை
மறந்தாள் ; இது புதுமைபற்றி வந்த மருட்கை யென்னும் மெய்ப்பாடு.
முத்தம் என்றது நீர்த்துளியை. செங்கண் கலுழ்ந்து முலைமேல் உகுத்தென
மாறுக. கொடிமின்-மின்னுக்கொடி. மின் உருவத்திற்கும், முகில் கூந்தலுக்கும்
உவமை. நிலஞ்சேர்ந்து - வணங்கி யென்றபடி.
9-15 தொழுதகை
மாதவ - வணங்குவதற்குத் தக்க பெருந்தவமுடையோய், துணிபொருள் உணர்ந்தோய்-மெய்ந்நூல்களால்
துணியப்பட்ட மெய்ப்பொருளை உணர்ந்தோய், காயங்கரையில் நீ உரைத்ததை
எல்லாம் - காயங்கரை என்னும் யாற்றங்கரையில் நீ மொழிந்தவை
அனைத்தும், வாயே ஆகுதல் மயக்கற உணர்ந்தேன்- மெய்ம்மை யாகுதலைத்
தெளிவுற அறிந்தேன், காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டுப் பூருவதேயம்-காந்தாரம்
என்னும் மிகப் பெரிய நாட்டில் உள்ள பூருவதேயமானது, பொறைகெட வாழும்-பாவங்களினின்றும்
நீங்குமாறு வாழ்ந்த, அத்திபதி என்னும் அரசாள் வேந்தன்-அரசு புரிந்த
அத்திபதி எனும் மன்னனுக்கு, மைத்துனன் ஆகிய பிரம தருமன் -மைத்துனனாகிய
பிரம தருமனே ;
"தொழுதகை மாதவ"
என்பது முதல் "என்றெடுத் தோதினை" என்பது காறும் உள்ளவை பழம்
பிறப்பில் பிரமதருமன் என்னும் முனிவன் மனக்குக் கூறிய வற்றைப்
புத்த பீடிகை காட்சியாலறிந்து, மணிமேகலை அவனை எதிர்பெய்து கூறியவை.
துணிபொருள் - தெளியப்பட்ட பொருள். உரைத்ததை ; ஐ : சாரியை,
வாய் - உண்மை. பொறை ஈண்டு பாவச்சுமை. வாழும் வேந்தன் என்க
; வாழும் பிரமதருமன் எனினுமாம். பிரமதருமன் : விளி.