பக்கம் எண் :

பக்கம் எண் :138

Manimegalai-Book Content
10. மந்திரங் கொடுத்த காதை
 

57--60. மறவணம் நீத்த மாசறு கேள்வி அறவணன் ஆங்கவன்பால் சென்றோனை - பாவத்தன்மைகளைத் துறந்த குற்றமற்ற கேள்வியினையுடைய அறவணன் என்னும் மாதவன் துச்சயனிடம் வந்தோனை, ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன்பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும்-துச்சயன் ஈண்டு வந்தீராகிய நீவிர் யார் என எழுந்து அம்முனிவனுடைய இயல்பினை நினைந்து அவன் திருவடிகளை வணங்குதலும்.

சென்ற அறவணனையென மாறுதலுமாம். "மறவண நீத்த மாசறு கேள்வி, அறவண வடிகள்" (2: 60-1.) என முன்பு வந்தமையுங் காண்க. எழுந்தவன்-எழுந்தோன் என்றுமாம், பாங்கு-இயல்பு, சிறப்பு, உளி-உள்ளி.

61--70. ஆதிமுதல்வன் அறவாழி ஆள்வோன்-ஆதிமுதல்வனும் அறமாகிய திகிரியை உருட்டுவோனுமாகிய புத்தன், மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி-மக்கள் பிறப்பு இறப்புகளாகிய மிக்க துன்பத்தினின்றும் நீக்கி, விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி- விலங்குகளையும் தம்முள்ளே அஞ்சுதற்குக் காரணமாகிய பகைமையை நீங்கச் செய்து, உடங்கு உயிர்வாழ்க என்று உள்ளம் கசிந்து உக - எவ்வுயிரும் தம்முள் ஒற்றுமையுடையனவாக வாழ்க என்று அருளினாலே உள்ளம் இரங்கி உருக, தொன்று காலத்து நின்று அறம் உரைத்த-முற்காலத்தில் எல்லா உயிர்களும் காணுமாறு நின்று அறங்கூறிய, குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்பாத பங்கயம் கிடத்தலின் - குன்றத்தின்கண் காமமாதி குற்றங்களை அழிக்கும் திருவடித் தாமரைகள் விளங்கிக் கிடத்தலினால், ஈங்கிது பாதபங்கயமலை எனும் பெயர்த்தாயது - இது பாதபங்கயமலை எனும் பெயரினையுடைத்தாயிற்று, தொழுது வலங்கொள்ள வந்தேன் ஈங்கு - யான் இம்மலையை வலங்கொண்டு வணங்குமாறு ஈண்டு வந்தேன், பழுதில் காட்சியீர் நீயிரும் தொழுமென - குற்றமற்ற அறிவினையுடைய நீவிரும் வணங்குவீராக என்று கூற;

துயர் எவ்வம்: ஒரு பொருட் பன்மொழி. கேட்டோர் உள்ளம் கசிந்து உக என்றுமாம். உரைத்த குன்றமாவது மகததேயத்தின் இராசதானியாகிய இராசக்கிருக நகரின் அருகிலுள்ள கிருத்திரகூடம் என்னும் மலையென்பர். பாதபங்கயம் - புத்தனுடைய பாததாமரை.

71--4.அன்று அவன் உரைத்த அவ்வுரை பிழையாது - அந்நாளில் அறவணவடிகள் கூறிய அம்மொழி தவறாமல், சென்று கை தொழுது சிறப்புச் செய்தலின் - சென்று கைகூப்பித் தொழுது விழாச் செய்தமையால், மாதவியாகியும் சுதமதியாகியும் கோதையஞ் சாயல் நின்னொடு கூடினர் - மலர் மாலையையுடைய மெல்லியலே அவ்விருவரும் மாதவியும் சுதமதியும் ஆகி நின்னொடுகூடினர்;

சிறப்புச் செய்தல் - பூசித்தலுமாம்.