75--82.அறிபிறப்புற்றனை அறம்பாடு அறிந்தனை - முற்பிறவியை அறிந்தாய்
அறத்தின் தோற்றத்தை உணர்ந்தாய், பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை
- பிறசமய உண்மைகளைக் கூறுவோர் பேற்றையும் கேட்பாய், பல்வேறு சமயப் படிற்றுரை
எல்லாம் அல்லியங்கோதை கேட்குறும் அந்நாள்-பலவேறு சமயங்களின் பொய்யுரைகளை
யெல்லாம் நீ கேட்கப் புகும் அந்நாளில், இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளைபொருள் உரையார் - இளமைத் தன்மையையுடையாள் வளையணிந்த நங்கை என்று
நினக்கு எவரும் தம் சமயங்களின் விளைபொருளைக் கூறார் ஆகலின், வேற்றுரு எய்தவும்
அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் வருந்திறல் மந்திரம் கொள்க என - வேற்று
வடிவங்கொள்ளவும் விசும்பின் வழியாகச் செல்லவும் செய்யும் அரிய ஆற்றலையுடைய
இம் மந்திரத்தைக் கொள்வாயாக என்று, வாய்மையின் ஓதி-நால் வகை வாய்மையுடன்
கூறியருளி.
அறம்பாடு - அறத்தின் கூறென்றும், அறத்தின்
இயல்பென்றும் உரைத்தலுமாம். பிற அறம் என்றது பிற சமயக் கொள்கைகளை. பெற்றி
- பேறு ; இயல்பென்றுமாம். அல்லியங்கோதை - அகவிதழ்களாலாகிய மாலையை யுடையாள்
; ஈண்டு முன்னிலை. வாய்மையின் - உண்மையுடன் என்றுமாம்.
83--93.மதிநாள் முற்றிய மங்கலத் திருநாள் - நாள்தோறும் ஒவ்வொரு
கலையாக வளர்ந்து முற்றுப்பெற்ற அழகிய நிறையுவா நாளில், பொது அறிவு இகழ்ந்து
புலம் உறு மாதவன் - பொதுவாகிய அறிவினை வெறுத்துச் சிறப்பாகிய மெய்யுணர்வினைப்
பெற்ற புத்தனுடைய, திருஅறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ - உயர்வாகிய
அறத்தை யடைதல் உண்மை என்பதை நீ அறிவாயாக, மன்பெரும் பீடிகை வணங்கினை
ஏத்தி - மிக்க பெருமையுடைய பீடிகையை வணங்கித் துதித்து, நின்பதிப் புகுவாய்
என்று எழுந்து, ஓங்கி-நினது பதியின்கட் செல்வாய் என்று கூறி உயர எழுந்து, மறந்ததும்
உண்டென மறித்து ஆங்கு இழிந்து - மீட்டும் அவ்விடத்தே இறங்கி யான் மறந்தது
ஒன்று உண்டென்று கூறி, சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய் - சிறந்த விரதத்தையுடைய
சேயிழையே அதனைக் கேட்பாயாக, மக்கள் யாக்கை உணவின் பிண்டம்-மக்களின்
உடல் உணவாலாகிய தொகுதி, இப்பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று - இப்
பெரிய மந்திரமானது பெரும் பசியை நீக்கவல்லது என்று கூறி, ஆங்கது கொடுத்தாங்கு
அந்தரம் எழுந்து நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என் - அம் மந்திரத்தை
அளித்துப் பெருமையுடைய மணி மேகலா தெய்வம் வானிலே எழுந்து நீங்கியது என்க.
|