பக்கம் எண் :

பக்கம் எண் :140

Manimegalai-Book Content
10. மந்திரங் கொடுத்த காதை
 

மங்கலம் - நன்மை. புத்தன் ஞானம்பெற்ற நாள் வைகாசித் தூய நிறைமதி நாள் ஆகலின் அதனை ''மங்கலத் திருநாள்'' என்றார். புத்தன் பிறந்த நாளும் அதுவேயாகும். பொது வறிவு - சிறப்பில்லா அறிவு ; சாமானிய ஞானம் என்பர் வடநூலார். புலம் - மெய்யுணர்வு. நால்வகை வாய்மையும் அறிதற்குரிய சிறப்பறிவு. சித்தம்-உறுதி. கொள்கை- கோட்பாடுமாம். உணவின் பிண்டம் - உணவாலாகிய தொகுதி ; 1 "உண்டி முதற்றே யுணவின் பிண்டம்" என்றார் பிறரும்.

ஆயிழை ஆசனத்தால் அறிந்த பிறவியளாயினள் ; இவள் பெற்றியும் ஐதென வந்து தோன்றிய தெய்வம், நின்றோள் கேட்ப, ''நீயோ தோன்றினை ; பணிந்தேன் ; வைத்தேன் ; கொண்டேன் ; ஏற்றினேன்; புலம்பு அறுக'' என்று வலங்கொண்டு வணங்குவோள் முன்னர்ப் பொருந்தி, என் பிறப்புணர்ந்தேன் ; என் கணவன் யாங்குளன் ?'' என்று மணிமேகலை கேட்டலும், அத்தெய்வம், "இலக்குமி ! கேள். பொழிலில் இராகுலனோடு நீ புலந்தாய் ; அப் புலவியை மாற்றவேண்டி அவன் உன்னடியை வணங்கும்பொழுது, சாதுசக்கரன் வந்து தோன்றலும், நீ கண்டு நடுக்குற்று நாணி இறைஞ்ச, இராகுலன் வெகுளலும்; நீ அவன் வாயைப் புதைத்து, '' நீ வானூடிழிந்தோன் அடியை வணங்காது நாநல் கூந்தனை'' என்று சொல்லி, அவனோடு பணிந்து, ''அமர ; கொணர்கேம் '' உண்டி'' என்றலும், அவன் ''கொணர்க'' என்று உண்டருளிய அவ்வறம் பிறப்பை யறுத்திடும்; உதயகுமரன்றான் இராகுலன்; அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கு முண்டாதலின், எண்ணி ஏதுவாச் செய்தேன் ; இன்னுங் கேள்; தாரையும் வீரையும் நின் தவ்வையராவோர்; அவர் தம்மைத் துச்சயன் கொண்டனன் அவன் அவருடன் இருந்துழிச், சென்ற அறவணனை அவன், ''வந்தீர் யார்?'' என்று எழுந்து பாதத்தைப் பணிதலும், அவன், ''பாத பங்கயதைத் தொழுது வலங்கொள்ள வந்தேன்; நீரும் தொழும்'' என்ற உரை பிழையாது சென்று தொழுது சிறப்புச் செய்தலின், நின்னொடு கூடினர் : உற்றனை ; அறிந்தனை ; கேட்குவை ; உரையார் ; ஆதலால் இம் மந்திரங் கொள்க" என ஓதி, உணர்நீ; புகுவாய்," என்று எழுந்தோங்கி, மறந்ததும் உண்டென இழிந்து, "யாக்கை உணவின் பிண்டம் ; இப்பெரு மந்திரம் இரும் பசி யறுக்கும்" என்று அதனைக் கொடுத்து எழுந்து நீங்கியது என வினைமுடிவு செய்க.

மந்திரங் கொடுத்த காதை முற்றிற்று.


1 புறம். 18.