பக்கம் எண் :

பக்கம் எண் :141

Manimegalai-Book Content
11. பாத்திரம் பெற்ற காதை

[மணிமேகலா தெய்வம் சென்றபின் மணிமேகலை ஆண்டுள்ள மணற்குன்று முதலியவற்றைப் பார்த்துக்கொண்டு மெல்ல உலாவி வருங்கால் தீவதிலகை யென்பாள் தோன்றி, "கப்பல் கவிழப்பெற்ற மகளிர்போல் இத்தீவிலே தனியே வந்த நீ யார்?" எனக் கேட்டனள் கேட்டலும், மணிமேகலை அவளை நோக்கி, "பூங்கொடி போல்வாய் ! ''யார் நீ?'' என்றது எனது எப்பிறப்பினைக் கருதி? யான் சென்ற பிறப்பில் இலக்குமி யென்னும் பெயருடையேன் ; இராகுலன் என்னுங் கோமனுக்கு மனைவியாயிருந்தேன் ; இப் பிறப்பில் நாடகக் கணிகையாகிய மாதவியின் மகளாவேன் ; மணிமேகலை யென்னும் பெயருடையேன் ; என் பெயர்த் தெய்வம் ஈங்கென்னைக் கொணர, இப்பீடிகையால் என் பழம் பிறப்பை யுணர்ந்தேன் ; இங்கு வந்தமையால் யான் அடைந்த பயன் இது ; என் வரலாறும் இதுவே" என்றுரைத்து, ''நீ யார் ?'' என வினாவலும், அவள், "இத்தீவிற்கு அயலதான இரத்தினத் தீவத்தில் உயர்ந்து விளங்கும் சமந்த மலையின் உச்சியிலுள்ள புத்ததேவர் அடியிணைப்படிமைகளைத் தொழுதுகொண்டு முன்னொரு காலத்தில் இங்குவந்தேன் ; வந்தது முதல் இந்திரன் ஏவலால் இப் பீடிகையைக் காத்துக்கொண்டிருக்கின்றேன் ; என் பெயர் தீவதிலகை யென்பது ; இதனைக் கேட்பாயாக : புத்ததேவர் அருளிய அறநெறியில் ஒழுகுவோரே இதனைக் காண்டற் குரியர் ; கண்டவர் பழம் பிறப்புணர்ச்சி கைவரப் பெறுவர்; நீ அங்ஙன மாயினமையின் மிகவும் பெரியை; இப் பீடிகைக்கு முன் கோமுகி யென்னும் பொய்கை யொன்றுளது ; அதனுள்ளிருந்து அமுதசுரபி யென்னும் அட்சய பாத்திரம் ஆண்டுதொறும் வைகாசித் தூய நிறைமதி நாளிலே தோன்றும் ; இன்று அந்நாளே; தோன்றும் பொழுதும் இதுவே; இப்பொழுது அது நின் கையில் வரும்போலும் ; அதில் இடப்பட்ட அடிசில் கொள்ளக் குறையாது வளர்ந்து கொண்டிருக்கும் ; அதன் வரலாற்றை நின்னூரில் அறவணவடிகள்பால் இனிக் கேட்பாய்," என்று கூறினள். கூற, மணிமேகலை அதனை விரும்பி, பீடிகையைத் தொழுது, அவளுடன் சென்று கோமுகியை வலஞ் செய்து வந்து நின்றவுடன், அப்பாத்திரம் பொய்கையனுள்ளிருந்து மணிமேகலையின் கையை அடைந்து, உடனே அவள் அளவற்ற மகிழ்ச்சியடைந்து நின்று, புத்ததேவரைப் பலவாறு துதித்தாள். அப்பொழுது மணிமேகலைக்குத் தீவதிலகை உயிர்களுக்குண்டாம் பசிப்பிணியின் கொடுமைகயையும், அதனைத் தீர்ப்போரது பெருமையையும், உரைத்து, ''இனி நீ உணவளித்து உயிர் கொடுத்தலாகிய அறத்தைச் செய்வாய்,'' என்றனள். இது கேட்ட மணிமேகலை, "முற்பிறப்பில் என் கணவன் அரவால் இறந்தது பொறாது யான் தீப் பாய்ந்து உயிர் விடுகையில் முன்பு சாது சக்கர முனிவனை உண்பித்த