நினைவுடையே னாயினேன் ; அதனாலேயே இப்பாத்திரம் என் கையிற் புகுந்ததுபோலும்
; இது நிற்க, ஈன்ற குழலியின் முகங்கண்டிரங்கிப் பால் சுரக்கும் தாய் போலவே,
பசியால் வருந்தி, வெயிலென்றும் மழையென்றும் பாராமல் எங்கணும் அலைந்துதிரியும்
ஏழைகளின் முகத்தைக் கண்டு இரங்கி, இப் பாத்திரம் அவர்கட்கு மேன்மேலும்
அமுது சுரந்தளித்தலைக் காணும் வேட்கை யுடையேன்," என்று கூறித் தீவதிலகையை
வணங்கி, புத்த பீடிகையைத் தொழுது வலங்கொண்டு, பாத்திரத்தைக் கையின் ஏந்தி
வானிலே யெழுந்து சென்று, புகார்நகரிலே தன்னைக் காணாது வருந்தி வழியை நோக்கின
வண்ணம் நிற்கும் சுதமதியையும் மாதவியையும் கண்டு, அவர்கள் வியப்படையும் வண்ணம்
அவர்களுடைய முற்பிறப்பை அறிவித்தது. "மக்கள் யாக்கையாற் பெறுதற்குரிய தவ
வழியை இனி அறவணவடிகள்பாற் பெறக் கடவீர் ; இஃது ஆபுத்திரன் கையிலிருந்த
அமுதசுரபி யென்னும் பாத்திரமாகும் ; இதனைத் தொழுமின்," என்று சொல்லி, அதனை
அன்புடன் தொழுத அவர்களோடும் அறவணவடிகளைத் தரிசித்தற்குச் சென்றனள். (இதன்கண்
மணிமேகலை புத்ததேவரை வாழ்த்தும் பகுதியும், பசியின் கொடுமையையும், அதனைப்
போக்குதலாகிய அறத்தின் மேன்மையையும் உணர்த்தும் பகுதிகளும் நினைவில் இருத்தத்தக்க
சிறப்புடையன.)]
|